71-வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் தேசியக் கொடியேற்றினார் – முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

 

71-வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் தேசியக் கொடியேற்றினார் – முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

71-வது குடியரசு தினமான இன்று காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை: 71-வது குடியரசு தினமான இன்று காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார்.

நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகரங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். அந்த வகையில், சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். மேலும் அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார். இதன் தொடர்ச்சியாக முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அணிவகுப்பை ஆளுநர் பார்வையிட்டார்.

இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால், துணை சபாநாயர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழக டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த குடியரசு தின விழாவில் கலந்துக்கொண்டனர்.