71வது குடியரசு தினம்! டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடி ஏற்றிய குடியரசு தலைவர்…

 

71வது குடியரசு தினம்! டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடி ஏற்றிய குடியரசு தலைவர்…

நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.

இன்று நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றினர். டெல்லியில் ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக ராஜபாதைக்கு வருகை தந்த குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சன்னோரோ ஆகியோரை வரவேற்றார்.

குடியரசு தலைவர், பிரேசில் அதிபரை வரவேற்ற மோடி

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய பிறகு இந்திய ராணுவத்தின் அணிவரிசை மற்றும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்கவர் அலங்கார ஊர்திகள் மற்றும் மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உள்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் குடியரசு தின விழாவை பார்ப்பதற்காக பல லட்சம் மக்கள் திரண்டுள்ளனர்.