கடனை திருப்பிக்கேட்டு 7 வயது சிறுவன் கடத்தல்… குற்றவாளியை மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசார்!

 

கடனை திருப்பிக்கேட்டு 7 வயது சிறுவன் கடத்தல்… குற்றவாளியை மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசார்!

தருமபுரி

தருமபுரியில் பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் கடத்தப்பட்ட சிறுவனை, 8 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இதனால், தருமபுரி வரும் போதெல்லாம், சரவணகுமார், ராஜசேகரின் வீட்டில் தங்கி வந்துள்ளார். ராஜசேகர் அவசர உதவிக்கு அவ்வப்போது சரவணகுமாரிடம் பணம் பெற்று வந்துள்ளார், மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன் ராஜசேகரின் மனைவி மற்றும் தாயார் ரூ.80 ஆயிரம் கடனாக பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சரவணகுமார் கடனை திருப்பி கேட்டபோது, தம்பதியினர் தற்போது பணமில்லை என கூறி உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் ராஜசேகரின் வீட்டிற்கு வந்த சரவணகுமார், நேற்று காலை ராஜசேகரின் இளைய மகன் ஹரிஷை(7) கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து, ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், தருமபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் நகர பி1 காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

கடனை திருப்பிக்கேட்டு 7 வயது சிறுவன் கடத்தல்… குற்றவாளியை மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசார்!

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டபோது சரவணகுமார் சொகுசு காரில், தப்பிச்சென்றது தெரிய வந்தது. மேலும், அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில், அவர் கோவையில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சரவணகுமாரை மடக்கிப்பிடித்து, சிறுவனை மீட்டு தருமபுரிக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, சரவணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த நகர போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகாரளித்த 8 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட தனிப்படையினரை தருமபுரி எஸ்.பி., கலைச்செல்வன் வெகுவாக பாராட்டினார்.