ஆரோக்கியமான எலும்புகளுக்கு ஏழு விதிகள்!

 

ஆரோக்கியமான எலும்புகளுக்கு ஏழு விதிகள்!

நம்முடைய உடலின் கட்டமைப்புக்கு காரணமாக எலும்புகள் உள்ளன. வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்பின் வலிமை குன்றத் தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் வயோதிகத்தின் போது எலும்பு முறிவு சர்வசாதாரணமாகிவிடுகிறது. எலும்புகளை உறுதியாக வைத்திருக்க செய்ய வேண்டிய ஏழு விதிகள் பற்றி இங்கே காண்போம்!

ஆரோக்கியமான எலும்புகளுக்கு ஏழு விதிகள்!

1) அதிக காய்கறிகளை சாப்பிட வேண்டும்

காய்கறிகளில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இது எலும்பு செல்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு உள்ளது.

2) உடற்பயிற்சி

எலும்புகளை உறுதிப்படுத்தத் தினசரி பயிற்சிகள் செய்வது நல்லது. சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் எலும்புகளின் அடர்த்தியை, எடை தாங்கும் வலிமையை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த மாதிரியான பயிற்சிகளை செய்யும்போது எலும்பு செல்கள் உற்பத்தி அதிகரித்து எலும்பு வலுப்பெறுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு அடர்த்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3) புரதச்சத்து அவசியம்

எலும்புகள் 50 சதவிகிதம் புரதத்தால் ஆனது. எனவே, எலும்புகள் உறுதியாக இருக்க புரதச்சத்து மிக மிக அவசியம். தினசரி உணவில் மிகக் குறைந்த அளவில் புரதச்சத்து எடுப்பவர்களுக்கு கால்சியம் கிரகிக்கப்படும் திறன் குறைவதாகவும், அது அவர்கள் எலும்பு அடர்த்திக் குறைவு உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4) கால்சியம் அவசியம்

எலும்பில் உள்ள மிக முக்கிய தாதுப்பு கால்சியம். கால்சியம் சத்து மிக்க உணவை தினசரி போதுமான அளவில் எடுப்பது எலும்புகளை உறுதிப்படுத்தும். ஒரு நாளைக்கு ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு 1000 மி.கி அளவுக்கு கால்சியம் தேவை. இதுவே இளம் வயதினருக்கு 1300 மி.கி அளவுக்கும், வயதான பெண்களுக்கு 1200 மி.கி அளவுக்கும் கால்சியம் தேவைப்படுகிறது. எனவே, தினசரி உணவில் போதுமான அளவு கால்சியம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

5) வைட்டமின் டி மற்றும் கே

உறுதியான எலும்பு கட்டமைக்கப்பட வைட்டமின் டி மற்றும் கே அவசியம் தேவை. கால்சியம் சத்தை நம்முடைய உடல் கிரகிக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது. வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

6) உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது…

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் எடை இயல்பு நிலையை விட அதிகரிக்கும்போது அது ஆஸ்டியோஒபினியா, ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. எலும்பு அடர்த்தி குறைவு ஏற்பட உடல் எடை அதிகரிப்பும் மிக முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது நல்லது.

7) புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுங்கள்

எலும்பு அடர்த்தி குறைபாட்டுக்கும் மது, புகையிலைப் பழக்கத்துக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் சுவாசிக்கும் சிகரெட் புகை, புகையிலையில் உள்ள நச்சுக்கள் எலும்பில் உள்ள தாதுகளை வெளியேற்றும் வேலையைச் செய்கின்றன. எனவே, புகையிலை, மது பழக்கத்தைக் கைவிடுவது எலும்பின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.