கந்துவட்டிக்காரன் டார்ச்சர்… மண்எண்ணெய் கேனுடன் வந்த தகப்பன்… 7 பேர் தீக்குளிக்க முயற்சி!- தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சி

 

கந்துவட்டிக்காரன் டார்ச்சர்… மண்எண்ணெய் கேனுடன் வந்த தகப்பன்… 7 பேர் தீக்குளிக்க முயற்சி!- தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சி

3 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 7 லட்சம் செலுத்தியும் கந்துவட்டிக்காரன் தொல்லை கொடுத்ததால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சம் கணேசன் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் வீட்டு பத்திரத்தை கொடுக்காமல் வட்டி கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கணேசன் ஏரல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த கணேசன், தன்னுடைய மனைவி வேளாங்கண்ணி, மகள் வெட்காளியம்மாள், நட்டார், மகன் செந்தில்குமார் மற்றும் வெட்காளியம்மாளின் 2 கைக்குழந்தைகள் ஆகிய 7 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென கையில் வைத்து இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஓடி வந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவர்களை மீட்டு சிப்காட் காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை பதறவைத்தது.