கடந்த 2 மாதத்தில்… 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!

 

கடந்த 2 மாதத்தில்… 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதாக அண்மையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. கடந்த ஆண்டு ஊரடங்கின் போதும் குழந்தை திருமணங்கள் அதிகரித்த நிலையில், அதே நிலை இந்த ஆண்டும் தொடருவது அரசை அதிருப்தி அடையச் செய்தது. இது குறித்து உடனடியாக ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் கீதா ஜீவன், குழந்தை திருமணங்கள் நடத்துவோர் மீதும் அதில் பங்கேற்போர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 2 மாதத்தில்… 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!

மேலும், குழந்தை திருமணங்களை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் குழந்தை திருமணம் நடைபெறுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், குழந்தை திருமணங்களை நடத்த தூண்டுபவர்கள், திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள். மணமகளின் வயது சான்றை பார்த்த பிறகே திருமண பத்திரிக்கையை அச்சடிக்க வேண்டும். குழந்தை திருமணம் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 1098 என்ற சைல்டு ஹெல்ப் லைன் எண்ணிலும் 04652 278404, 04652 278980 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.