7 வயதில் சென்னையில் திருடன், 18 வயதில் கனடாவில் சமையல் கலை நிபுணர்!

 

7 வயதில் சென்னையில் திருடன், 18 வயதில் கனடாவில் சமையல் கலை நிபுணர்!

எல்லாராலும் சாஷ் மாதிரி சுயமாக நிற்க முடியாதபோது, சிலர் பழைய பாணியில் திருடுவது மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது என திசைமாற, அவர்களுக்கென தனியாக ஒரு அமைப்பை துவங்கியுள்ளார் சாஷ்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வளர்ப்பு அன்னை வளர்ப்பினிலே. பாடல் வரிகளில் ஒரே ஒரு வார்த்தை மாற்றப்பட்டிருப்பது சாஷ் சிம்சன் என்னும் பிரபல கனேடிய சமையல்கலை நிபுணருக்காக. ஏழு வயதுவரை சென்னை தெருக்களில் திருடுவதும், பிச்சை எடுப்பதுமாக இருந்த சிம்ப்சனை, சென்னையில் உள்ள அனாதை குழந்தைகளுக்கான அமைப்பு தத்தெடுக்கிறது. கனடாவைச் சேர்ந்த சாண்ட்ரா சிம்சன் என்ற தயாள மனம்படைத்த தாயின் அரவணைப்பில் இருப்பதற்காக கனடாவுக்கே செல்கிறார் சிம்சன்.

Sash With Sandra

வளர்ப்புப் பெற்றோரான சிம்சன் தம்பதிகளின் எட்டாவது வயதில் கனடா வீட்டிற்குள் நுழைந்ததும், சாஷுக்கு அதிர்ச்சி. சென்னை தெருக்களில் அனாதையாக சுற்றித்திரிந்த சாஷுக்கு, கனடாவில் 27 சகோதர சகோதரிகள் உடன் வளரும் அன்பான  சூழல். சாஷ் போனபோது 27 சகோதரர்களாக இருந்த எண்ணிக்கை, அதன்பின் 31ஆக கூடியது. சாண்ட்ரா தம்பதிகளின் அன்பினாலும், கவனிப்பினாலும் ஆண்டுகள் உருண்டோடும்போது அங்கேயே படித்து, அங்கே உள்ள ஒரு உணவகத்தில் பணிக்கு சேர்கிறார் சாஷ். முதல் மூன்று மாதங்கள் ஊதியம் இல்லாத அப்ரசெண்டியாக வேலை செய்தாலும், தொடர்ந்து தன் தனித்திறனால், 24 ஆண்டுகள் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து, அந்நிறுவனத்தின் தலைமை சமையல் நிபுணராகிறார்.

Sash With His Siblings

சாண்ட்ரா தம்பதிகள் ஏழை அனாதை குழந்தைகளை உலகின் வெவ்வேறு மூலையில் இருந்து தத்தெடுத்து வளர்த்தாலும் அங்கே ஒரு சின்ன இடைஞ்சல். அக்குடும்பத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் 18ஆவது வயது முடியும்போது வீட்டை விட்டு வெளியேறி சொந்தக்காலில் நிற்கவேண்டும். எல்லாராலும் சாஷ் மாதிரி சுயமாக நிற்க முடியாதபோது, சிலர் பழைய பாணியில் திருடுவது மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது என திசைமாற, அவர்களுக்கென தனியாக ஒரு அமைப்பை துவங்கியுள்ளார் சாஷ். தனக்கு கிடைத்த உதவியை பற்றி முன்னேறிய சாஷ் இன்று, பலரை மேலேற்றும் ஏணியாக இருக்கிறார்.