7 மாசத்துல நேரடி வரிகள் வாயிலான வசூல் ரூ.5.18 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல்

 

7 மாசத்துல நேரடி வரிகள் வாயிலான வசூல் ரூ.5.18 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல்

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் நிகர நேரடி வரிகள் வசூல் ரூ.5.18 லட்சம் கோடியாக உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கில் 50 சதவீதத்தை கூட தொடவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி., நேரடி வரி வசூல் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த நிதியாண்டில் மத்திய ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.6.63 லட்சம் கோடி வசூலாகும் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் வரை மத்திய ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.3.26 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

அனுராக் சிங் தாகூர்

இந்த நிதியாண்டில் நேரடி வரிகள் வாயிலாக ரூ.13.35 லட்சம் கோடி திரட்ட மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல்-அக்டோபர்) நிகர நேரடி வரிகள் வசூல் ரூ.5.18 லட்சம் கோடியாக உள்ளது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான நிறுவன வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

ஜி.எஸ்.டி.

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பின் போது, இந்த நிதியாண்டுக்கான வரி வசூல் மற்றும் நிதிப்பற்றாக்குறை தொடர்பாக மறுமதிப்பீடு செய்யப்படும். தற்போது 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு மற்றும் 2019-20ம் நிதியாண்டுக்கான மதிப்பீடு திருத்த பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.