7 பேர் விடுதலைக்கு நோ..அதிமுக-வுக்கு ஓகே சொன்ன ஆளுநர்: கொந்தளிப்பில் நெட்டிசன்கள்

 

7 பேர் விடுதலைக்கு நோ..அதிமுக-வுக்கு ஓகே சொன்ன ஆளுநர்: கொந்தளிப்பில் நெட்டிசன்கள்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேரை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேரை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர், 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை முன்விடுதலை செய்யக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இரண்டு ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி என்று குறிப்பிட்டு கடந்த 2018 ஏப்ரல் 18-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியது.

governor

அந்த கடிதத்தில், “முன்னாள் பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் பரிந்துரை கடிதத்தை நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதன் அடிப்படையில் தமிழக அரசின் பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என தண்டனைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடியரசு தலைவர் மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு, 7 பேரின் விடுதலை தொடர்பாக தங்களுக்கு எந்த பரிந்துரை கடிதமும் வரவில்லை என்று குடியரசு தலைவர் மாளிகை பதில் அனுப்பியுள்ளது.

மேலும், தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை என்றும், உயர்மட்ட அதிகாரியால் 7 பேரின் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

dharmapuri

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து வரும் அவர்களின் விடுதலையில் இத்தனை குழப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

அதே சமயத்தில், கடந்த 2000-ஆம் ஆண்டு டான்சி வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் 3 மாணவிகளை பேருந்தில் வைத்து உயிருடன் எரித்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

dharmapuri

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 3 மாணவிகளை உயிருடன் எரித்த குற்றவாளிகளை முன்விடுதலை செய்யக்கோரி, சட்டம்-ஒழுங்கை பேணி காக்க வேண்டிய தமிழக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்புகிறது.

அந்த பரிந்துரை கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மூன்று பேரையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கிறார்.

edappadi

ராஜீவ் வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவித்தால், தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என நியாயம் பேசியவர்கள், தற்போது வேறு பணிகளில் பிஸியாகி இருப்பதால் பாவம் அவர்களுக்கு நேரம் இல்லை என வலைதளவாசிகள் கிண்டல் அடிக்கின்றனர்.

அதேபோல், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஆளுநரின் இந்த அறிவிப்பு விவாத பொருளாக மாறியுள்ளது.