7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை; சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை!

 

7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை; சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இதனுடன் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பிரதானமாக இடம் பெற்றிருப்பது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை.

manifesto

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஈழப் படுகொலை, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர் விடுதலை உள்ளிட்ட சில விஷயங்களை அரசியல் கட்சிகள் மறக்காமல் கையில் எடுக்கும். ஆனால், அவை அனைத்தும் அந்த ஆட்சி முடியும் வரை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கும் அல்லது வலியுறுத்தப்பட்டு கொண்டே வரும்.

அதன் நீட்சியாக இந்த முறையும் தமிழக்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளினுடைய தேர்தல் அறிக்கைகளில் எழுவர் விடுதலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

rajivgandhi

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக, திமுக-வால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. பா.ஜ.க.-வால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். திமுக தேர்தல் அறிக்கை குப்பையில் போடப்பட வேண்டியது. 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என்றார்.

7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறுவது இது முதல் முறை அல்ல. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி இறுதியான பின்னர் இந்த கருத்தை அவர் அடுத்தடுத்து கூறி வருகிறார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பிரதான கட்சியான பாமக-வின் கோரிக்கைகளில் முக்கியமானது எழுவர் விடுதலை. அதிமுக-வும் எழுவர் விடுதலையை தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது.

aiadmk alliance

ஆனால், பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு புறம்பாக பேசி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு சிறிய வகையில் கூட எதிர்வினையாற்றாத அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தான், இப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கும் தேசிய கட்சியிடம் அழுத்தம் கொடுத்து அவர்களது விடுதலைக்கு வழிவகுக்கப் போகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.