7 பேர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பத்திரிகையாளர் மீது தாக்குதல்-வீடியோ

 

7 பேர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பத்திரிகையாளர் மீது தாக்குதல்-வீடியோ

ஆளுநர் மாளிகையில் மதிமுக தலைமையில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: ஆளுநர் மாளிகையில் மதிமுக தலைமையில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படியில், தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இதுகுறித்த எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். 

இதனிடையே, 7 பேரை விடுதலை செய்யாத ஆளுநரை கண்டித்து கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் 3-ம் தேதி (இன்று) நடக்கும் என்று மதிமுக அறிவித்திருந்தது. மதிமுகவின் இந்த போராட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், ஆளுநர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். இதனையடுத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் சிலர் அருகில் உள்ள கடைக்கு சென்று சில பொருட்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். மேலும், அதற்கு பணம் தர மறுத்து கடைக்காரர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையை சேதப்படுத்தியுள்ளனர். அப்போது, இந்த செய்தியை தனது செல்போனில் படம் பிடிக்க சென்ற தனியார் பத்திரிகையாளர் பிரமோத் என்பவரையும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பத்திரிகையாளர் பிரமோத்திற்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரமோத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி சேகரிக்க பத்திரிகையாளரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி சக பத்திரிகையாளர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் சமாதான முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், பத்திரிகையாளரை தாக்கியவர், திமுக-வை சேர்ந்த சுரேஷ் பாபு என தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.