புரட்டாசி மாத துவங்கியதையொட்டி, அனைத்து பெருமாள் கோவில்களும் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டு, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் புகழ் பெற்ற கோவிலான திருப்பதியில் பிரம்மோற்சவம் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெறும். மக்களின் கூட்டம் கோவிலுக்குத் திரண்ட படியே இருக்கும். இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பிரம்மோற்சவத்தின் 5 ஆம் நாளான நேற்று, காலை மோகினி அலங்காரத்திலும், இரவு கருட வாகனத்திலும் மக்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி பிரம்மோற்சவத்தைக் காண நேற்று மூன்று லட்சம் மக்கள் வந்து தரிசனம் செய்தனர். மக்கள் அனைவர்க்கும் பிரசாதம் வழங்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் நேற்று பிரம்மோற்சவம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா காலை நடைபெற்றது. ஊர்வலத்தின் போது பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம் ஆடியபடி கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தங்கத் தேரோட்டமும் இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது. நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் காண ஆரவாரமாக மக்களின் கூட்டம் திரண்டு கொண்டே உள்ளது.