“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

 

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

பிக்பாஸ் சீசன் 4-ன் வினோதமே, சுவாரஸ்யமானதாக மாறும் என நினைப்பது மொக்கையாகவும், இதில் என்ன இருக்கு என நினைப்பது சுவாரஸ்யமாகவும், ஹியுமராக இருக்கும் டாஸ்க் என நினைப்பது சண்டையாக மாறுவதும் என பிக்பாஸ் நினைப்பதற்கு மாறாக நடக்கும். உண்மையில் ஆடியன்ஸ்க்கு மட்டுமல்ல, பிக்பாஸ் டீமுக்குமே இந்த சீசன் எதிர்பாராததை எதிர்பாருங்கள்தான். நேற்றைய எப்பிசோட்டில் 64 நாட்களாக பிக்கி முயற்சி செய்தது நடக்க தொடங்கியிருக்கிறது. விரிவாகக் கட்டுரையில் பார்ப்போம்.

65-ம் நாள்

‘எந்திரன் 1’லிருந்து ரோபோ பாடலை ஒலிக்க விட்டார் பிக்கியின் தம்பி. கேப்டன் ஆன அனிதா உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தார். சம்யுக்தா வெளியேறியதும் ரம்யா, ஷிவானி கூட்டணி தொடர்ந்துகொண்டிருந்தது. வெளியே அர்ச்சனா அண்ட் கோ ஆடின.

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

நேரடியாக விஷயத்துக்கு வாரேன்னுட்டு லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார் பிக்கி. வீட்டுக்குள் இரு அணிகளாகப் பிரிந்து, ஓர் அணி ரோபோவாகவும், மற்றோர் அணி மனிதர்களாகவும் (!) இருக்க வேண்டும். மனிதர்கள் அணி, ரோபோவுக்கு உணர்ச்சிகள் வர வழைக்க வேண்டும். இதுதான் டாஸ்க்.

பாலாவும் அர்ச்சனாவும் ஒரே அணிக்குள் இருந்துவிட்டால் கண்டண்ட் கிடைக்காது என நினைத்த பிக்கி, அவரே பிரித்து அறிவித்தார். ரோபோ அணி தலைவர் அர்ச்சனா. அவரின் அணியில் ரம்யா, சோம், கேபி, ஷிவானி, ரமேஷ். மனிதர்கள் அணி தலைவர் பாலா, அவரின் அணியில் ரியோ, அனிதா, நிஷா, ஆரி, ஆஜித்.

ரோபோ வேடங்கள் முடிந்ததும், என்னென்ன செய்து உணர்ச்சிகளை வர வழைக்கலாம் என படுபயங்கரமான போஸ்களில் நின்று மொக்கையான ஐடியாக்களைப் பேசிட்டு இருந்தார்கள்.

ரோபோக்கள் எல்லாம் அனிதா, தனித்தனியாகப் பெயர் வைத்துக்கொண்டிருந்தார். ரமேஷ்க்கு ராஜா வீட்டு கன்னுக்குட்டி, அர்ச்சனாவுக்கு பாஸி, ஷிவானிக்கு மேக்கப் ரோபோ என்பதாக.

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

ரோபோவை எல்லாம் 50 ரூபா கார் பொம்மை போல அங்கே போ, இங்கே வா என விரட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரின் முழு கவனமும் அர்ச்சனாவை வீழ்த்துவதாக இருந்தது. மற்றவர்களை பெரிதாகக் கண்டுக்கொள்ள வில்லை.

’ஓடி வாரேன் பிடிச்சிங்கோங்க’ என்று அனிதா ஓடி வந்து அர்ச்சனாமீது தாவி உட்கார்ந்தார். ‘நானும் ஓடி வாரேன்’னு நிஷாவும் ரெடியாக, அதுக்கும் அர்ச்சனா தயாராகினார். ஆனால், ஓடி வந்து வேறு பக்கம் ஓடிவிட்டார். ஆனாலும், மறுபடியும் நிஷா ஓடி வந்து, அர்ச்சனா மீது தாவி உட்கார்ந்தார். அர்ச்சனா நிஜமாகவே வலுவான பெண்மணிதான்.

அர்ச்சனாவுக்கு முட்டை கவுச்சி பிடிக்காது போல. அதனால், முட்டையை உடைக்கச் சொல்லி முகத்தில் தடவிக்கொள்ளச் செய்தார்கள். ஆனால், ஆச்சர்யம், அதை முகம் சுளிக்காமல் செய்தார் அர்ச்சனா. சான்ஸே இல்ல. முட்டையைக் கலக்கிய கையை மூக்கின் மேலேயே வெச்சிக்கணும்னு உத்தரவு இட்டபோதும் அதைக் கடைப்பிடித்தார். சில நேரங்களில் பிக்பாஸ் கேம்மில் கலந்துகொள்பவர்கள் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும். இது விளையாட்டுதானே என்று நினைக்காது உயிரைக் கொடுத்து ஆடுவார்கள்.

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

‘நிஷா அழகானவங்க’ என பல முறை சொல்லச் சொல்லி ரோபோ ரமேஷ்க்கு உத்தரவிட்டது வேற யார் நிஷாவேதான். இன்னொரு பக்கம் காது அரிக்குது. சொறிஞ்சுக்கலாமா என்று கேட்டுவிட்டு சொறிந்துகொண்டது ரோபோ சோம். ஷிவானி ரோபாவை காதுக்குள் விரலை விடச் செய்து, அப்படியே மூக்குக்குள் விடச் செய்து அதை வாயில் வைத்துக்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. (வ்வே)

பாத்ரூம் அருகே சென்ற ரோபோ ரம்யாவை, பல் துலக்கச் செய்து கொப்பளிக்கும் முன் பாடச் செய்து ரசித்தார்கள். இன்னொரு பக்கம், ரமேஷை அழைச்சிட்டு போய், கை அமுக்கச் செய்தார் ஆரி. ரோபோ டாஸ்க் நிஜமாகவே ரமேஷ்க்கு கொடுமையானதுதான். எந்த டாஸ்க்கா இருந்தாலும் சோபாவில் காலை விரிச்சி ஹாயாக உட்கார்ந்திடுவார். இதில் ரொம்பவே வேலை இருக்குனு நினைச்சார். அதற்கு ஒரு வழி ஏற்படுத்திக்கொடுத்திட்டார் ஆரி.

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

அர்ச்சனாவைக் கோபம் வர வழைக்க நிஷா கையாண்ட உத்தி, அர்ச்சனாவின் இறந்த அப்பாவைப் பற்றி பேச வைப்பது. இதில் எப்படி கோபம் வரும் என பார்க்கும் நமக்கே தெரிகிறது… நிஷாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யமே…

‘அப்பா எப்படி இறந்தார்கள்… அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது… அப்பாவை எப்போவெல்லாம் நினைச்சிப்பீங்க… என கேள்வி கேள்வியாகக் கேட்டுட்டே இருந்தார்.

’அப்பா இறந்ததும் நான் அப்பாவாக மாறிட்டேன். அப்பா செய்ய வேண்டியதை நானே செய்தேன். அப்படி செய்யும் ஒவ்வொரு தருணமும் அவரை நினைப்பேன்’ என்று அர்ச்சனா சொன்னது உண்மையில் நெகிழ்ச்சி.

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

உண்மையில் வேறெங்கோ அர்ச்சனாவே அப்பாவைப் பற்றிச் சொல்வதாக அமைந்திருந்தால் எல்லோருக்கும் நெகிழ்ச்சியாக இருந்திருக்கும். இது டாஸ்க் என்பதால் அவர் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு சொன்னார். ஆனால், நிஷா விடாமல், ’ஹாஸ்பெட்டலுக்கு உள்ளே அப்பாவைக் கொண்டு போகும்போது டாக்டர் என்ன சொன்னாங்க’ எனத் துருவினார். ‘வரும் வழியிலேயே இறந்திட்டாங்க’ என்று அர்ச்சனா சொன்னாலும், ‘அப்போ என்ன பண்ணினீங்க?’என்று அபத்தமாக ஒரு கேள்வியை வைத்தார். ‘அப்பவும் இதேபோல நின்னுட்டு இருந்தேன்’ என அர்ச்சனா சொன்னது உணர்வுபூர்வமானது.

ஆனால், நிஷா விடாமல், ‘இப்போ, உங்கள் அப்பா இறந்த செய்தியைச் சொல்றாங்க… என்ன செய்வீங்க’ என அபத்ததின் மேல் அபத்தமாகக் கேட்டுக்கொண்டே இருந்தார். திடீரென்று உள்ளே வந்த சோம், ரோபோ ட்ரஸைக் கழற்றி ‘என்னை ஏன் தலையில அடிச்ச… நீ ஏன் இப்படி நிக்கிற?” என சீரியஸாகப் பேச ஏதோ ட்ரை பண்ண, நிஷா பதறி அவரை விசாரிக்க, மறுபுறம், அர்ச்சனாவை இவ்வளவு தூண்டிவிட்டு வெச்சிருந்தோம் அது கலைஞ்சி போச்சுனு கதற… ஒரே களேபாரம்.

ரியோ அண்ட் கோ உள்ளே வந்து இது ஒருவகை பிராங்க் எனச் சொல்லி ஆட்டத்தை முடித்தார்கள். அர்ச்சனாவிடம் அப்பாவைப் பற்றி கேட்டது தவறுன்னு அதுக்கப்பறம்தான் நிஷாவுக்கு உறைச்சிருக்கு. கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்னு சொல்வாங்க. ஆனா, இது மரண படுக்கையிலதான் தெரிஞ்சிருக்கு. ஓடிபோய் வெளியே உட்கார்ந்து அழுதுட்டு இருந்தார் நிஷா.

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

அங்கே போன ரியோ அதையும் ஒரு டாஸ்க்காக மாற்றி, ‘போய் ஆரிகிட்ட சண்டை போடு. அதைப் பார்த்து, ரமேஷ் கோபப்படுவார்… ரோபோ வேஷம் கலைஞ்சிடும்’ என ஐடியா கொடுக்க, இப்பதாண்டா உட்கார்ந்தேன். அதுக்குள்ள வேலை சொல்றீயேன்னு அலுத்துக்கொண்டு கிளம்பினார் நிஷா.

‘எவ்வளவு நேரம் ரமேஷை உட்கார வைச்சி பேசுவீங்க… ஓர் அளவு வேண்டாமா’ என எவ்வளவு கத்தியும் ரமேஷிடம் பெரிய ரியாக்‌ஷன் இல்ல. சோஷியல் மீடியாவில் ஒருவர் போட்ட மீம்தான் நினைவுக்கு வருகிறது. ரியோவைப் பார்த்து ரமேஷ் சொல்கிறாராம், ‘நீ எல்லாம் பஞ்சத்துக்குத்தான் ரோபா… நானென்ல்லாம் பொறந்ததிலிருந்தே ரோபோதான்’

ரோபோவுக்கு கொடுக்கப்பட்ட இதயங்களைப் பறித்ததில் சில பஞ்சாயத்துகள். அது முடிந்ததும், அர்ச்சனா அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வெடிக்க விட்டார். ‘என் அப்பாவைப் பற்றி இப்படி கேட்கிறீங்களே…. இது நியாயமா? என அழத் தொடங்க, ‘நான் வெளியில போய் அழுதென் தெரியுமா?’என நிஷா பதில் சொன்னது இன்னோர் அபத்தம்.

“என் அப்பா மரணம் உனக்கு விளையாட்டா?” கொதித்த அர்ச்சனா – பிக்பாஸ் 65-ம் நாள்

“என் அப்பா மரணம்.. உனக்கு விளையாட்டா?” என நிஷாவிடம் சீறினார் அர்ச்சனா. அவரை சமாதானப்படுத்த மற்றவர்கள் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்க வில்லை. ரியோவையே வெளியே போகச் சொல்லிவிட்டார். ஒருபக்கம் அர்ச்சனாவும் மறுபக்கம் நிஷாவும் அழுவதோடு எப்பிசோட் முடிந்தது.

அர்ச்சனாவோடு இருந்த பழக்கத்தினால் எல்லை மீறி நிஷா போயிருக்கக்கூடாது. சட்டென்று உணர்ச்சி வசப்படும் ஒருவர் அவ்வளவு நேரம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு தம் வாழ்வில் மிகக் கொடூரமான பக்கங்களைப் பகிர்கிறார் என்றால், அது வேறுபக்கம் வெளிப்படாமல் வெடித்துவிடும். அதற்கான சரியான உதாரணமே இன்றைய அர்ச்சனா. என்னதான் கேம் என்றாலும் உணர்வுகளோடு விளையாடுவது கத்தி மேல் நடப்பதற்குச் சமமே… அதை நிஷா புரிந்துகொண்டிருப்பார் இந்நேரம்.

இந்த டாஸ்க் மூலம், அர்ச்சனா அண்ட் கோவில் நடுநரம்பாக இருந்த அர்ச்சனாவை உடைத்துவிட்டார் பிக்பாஸ். இனி லவ் பெட் குழு கலகலத்துப் போகும் என்றே தோன்றுகிறது.