ஆழ்ந்த தூக்கத்துக்கு 6 வழிகள்!

 

ஆழ்ந்த தூக்கத்துக்கு 6 வழிகள்!

மன அழுத்தம், வேலை பளு என பல பிரச்னைகள் நம்முடைய இரவு ஆழந்த தூக்கத்தைக் கெடுக்கின்றன. சிலருக்கு உடல் நலக் குறைவு காரணமாக சரியான தூக்கம் கிடைப்பது இல்லை. இந்த பிரச்னைகளை கண்டறிந்து அதை சரி செய்வதன் மூலம் அனைவராலும் ஆழ்ந்த, சுகமான தூக்கத்தை அனுபவிக்க முடியும்.

ஆழ்ந்த தூக்கத்துக்கு 6 வழிகள்!

அமெரிக்காவின் mayo clinic பரிந்துரைக்கும் தூக்கத்துக்கான ஆறு வழிகள் பற்றி இங்கே காண்போம்.

1) சரியான நேரத்துக்கு தூங்க வேண்டும்.

ஒரு நாளைக்கு தோராயமாக ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம். குறைந்தபட்சம் ஏழு மணி நேரமாவது தூக்கம் தேவை. தினமும் சரியான தூக்கம் கிடைக்கா, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வார இறுதி நாள்தானே என்று நேரம் கழித்து தூங்கச் செல்வது எல்லாம் கூடவே கூடாது.

படுக்கைக்குச் சென்று 20 நிமிடத்தில் தூங்கிவிட வேண்டும். எடுத்த எடுப்பில் எல்லோருக்கும் படுக்கைக்கு சென்ற உடன் தூக்கம் வந்துவிடாது. அதற்கு சில நாட்கள் ஆகலாம். 20 நிமிடத்தில் தூக்கம் வரவில்லை என்றால் படுக்கையைவிட்டு எழுந்து மனதை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

2) சாப்பாட்டில் கவனம்

நாம் என்ன சாப்பிடுகிறோம், எதை அருந்துகிறோம் என்பதில் கவனம் தேவை. நிக்கோடின், காஃபின், ஆல்கஹால் உள்ளிட்டவை தூக்கத்தைப் பாதிக்கும்.

3) சுகமான சுற்றுச்சூழலை ஏற்படுத்த வேண்டும்

நாம் தூங்கச் செல்லும் அறை நான்கு குளிர்ச்சியானதாக, இருட்டாக, அமைதியாக இருக்க வேண்டும். சின்ன வெளிச்சம் கூட தூக்கத்தைக் கெடுத்துவிடும்.

4) பகல் தூக்கத்தைக் குறைக்க, தவிர்க்க வேண்டும்!

இரவில் ஆழ்ந்த தூக்கம் பெற பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். என்னால் தூங்காமல் இருக்க முடியாது என்று உள்ளவர்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் தூங்கிக்கொள்ளலாம். பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தூங்க வேண்டாம்.

5) உடல் உழைப்பை வழக்கமாக்குங்கள்

உடற்பயிற்சி நம்முடைய தூக்கத்தை மேம்படுத்தும். அதற்காக தூங்கச் செல்வதற்கு முன்பு உடற்பயிற்சி செய்கிறேன் என்று சென்றுவிட வேண்டாம். காலையில், மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்.

6) மன அழுத்தம் தவிர்த்துவிடுங்கள்

மன அழுத்தத்தோடு இருந்தால் தூக்கம் வராது. எனவே, மனதில் உள்ள பாரங்கள், சோகங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு படுக்கைக்கு வாருங்கள். மன அழுத்தம் தவிர்ப்பது ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும். உங்கள் நாளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள், எது மிக முக்கியமோ அதை முதலில் முன்கூட்டியே முடிப்பது என்று திட்டமிடுங்கள். இது வீண் மன அழுத்தத்தைத் தவிர்க்க உதவும்.