6 மணி நேரம் வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

 

6 மணி நேரம் வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6 மணி நேரம் வரிசையில் நின்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

டெல்லியில் தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசின் ஆட்சி காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால், 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டின. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நேற்றுதான் கடைசிநாள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட உள்ளார். அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவற்காக மதியம் 12.30 மணிக்கு வந்தார்.

பா.ஜ.க.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நேற்றுதான் கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் வந்திருந்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 45வது டோக்கன் வழங்கப்பட்டது. அதனால் அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அரவிந்த கெஜ்ரிவால் முதலில் கடந்த திங்கட்கிழமையன்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தார்.ஆனால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் அவரால் அன்று வேட்பு மனுவை தாக்கல் செய்யமுடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்வதை பா.ஜ.க.வால் தடுக்க முடியாது என டெல்லியின் துணை முதல்வர் சிசோடியா டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.