ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் உள்ள 18,000 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய போராட்டத்தின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள், இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அன்றே சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஐந்தாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களை நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது, அரசு மருத்துவர்களுடன் தரையில் அமர்ந்த மு.க ஸ்டாலின், உண்ணாவிரதப் போராட்டம் இருந்து தங்களது உடல்களை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து, இத்தனை முறை போராட்டம் நடத்தியும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் தமிழக அரசு, போராட்டம் நடத்தும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.