‘மாஞ்சா நூலில் பட்டம்’.. வடசென்னையில் அதிரடியாக 55 பேர் கைது!

 

‘மாஞ்சா நூலில் பட்டம்’.. வடசென்னையில் அதிரடியாக 55 பேர் கைது!

சென்னையில் மாஞ்சா நூலால் பல விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் இவை தொடர்கதையாகவே இருக்கிறது. குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் பட்டம் விடுவது அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் மூலக்கடை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த மாதவன் (33) என்பவரை, மாஞ்சா நூல் அறுத்ததால் அவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னரும் மாஞ்சா நூலால் ஒரு குழந்தை உயிர் இழந்தது. மேலும், ஒரு காவலர் கூட மாஞ்சா நூலால் படுகாயம் அடைந்தார்.

‘மாஞ்சா நூலில் பட்டம்’.. வடசென்னையில் அதிரடியாக 55 பேர் கைது!

இத்தகைய சம்பவங்கள் தொடருவதால், வட சென்னை முழுவதிலும், மாஞ்சா நூலால் பட்டம் விடுபவர்களை கைது செய்யுமாறு சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவின் பேரில் வடசென்னையின் முக்கிய பகுதிகளான மூலக்கடை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூா், எண்ணூா், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் வைத்திருந்த 48 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து மேலும் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்தமாக 55 பேர் தற்போது கம்பி எண்ணுகின்றனர். அவர்கள் 55 பேரும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்த பட்டங்களையும் மாஞ்சா நூல்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மாஞ்சா நூல் சம்பவங்கள் தொடர்ந்தால் நடவடிக்கை கடுமையாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.