கர்நாடகாவுக்கு வேனில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது!

 

கர்நாடகாவுக்கு வேனில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது!

ஈரோடு

தாளவாடி அருகே கர்நாடகாவுக்கு வேனில் கடத்திச்சென்ற 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார், இதுதொடர்பாக வேன் ஓட்டுநரை கைதுசெய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடத்தலை தடுக்க மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவுக்கு வேனில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது!

இந்த நிலையில், தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தாளவாடி அடுத்த ஒங்கனபுரம் கிராமத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கர்நாடகா நோக்கி சென்ற டாடா மினி டெம்போ காரை மறித்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையில், வேனில் 500 கிலோ ரேஷன் அரிசியை, சாம்ராஜ் நகருக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்த குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு போலீசார், இதுதொடர்பாக கார் ஓட்டுநர் தாளவாடி ஒங்கனபுரத்தை சேர்ந்த வீரன்னாவை (48) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.