அசாமில் நில அபகரிப்பு கும்பல் துணிகரம் – 50 வயது பெண்ணை தீ வைத்து கொளுத்தினர்

 

அசாமில் நில அபகரிப்பு கும்பல் துணிகரம் – 50 வயது பெண்ணை தீ வைத்து கொளுத்தினர்

ஹொஜாய்: அசாம் மாநிலத்தில் நில அபகரிப்பு கும்பல் ஒரு பெண்ணை தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் ஹொஜாய் மாவட்டத்தில் தக்ஷின் சமராலி பகுதியில் நிலத் தகராறு தொடர்பாக ஒரு மாஃபியா கும்பல் 50 வயது பெண்ணுக்கு தீ வைத்தனர். உள்ளூர்வாசிகள் சிலர்  இந்த சம்பவத்தை வீடியோவாக படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் வைரலாகின.

ஒரு நில அபகரிப்பு கும்பல் சலேஹா பேகம் எனும் பெண்ணின் நிலத்தை அபகரித்து டிராக்டர் மூலம் உழுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சலேஹா பேகம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அந்த நில அபகரிப்பு கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது சலேஹா பேகத்திற்கு நில அபகரிப்பு கும்பல் தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து உள்ளூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக முராஜர் காவல் நிலையத்தில் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

முராஜர் காவல் நிலைய பொறுப்பாளர் கபீர் லிம்பு கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் அளித்ததைத் தொடர்ந்து நாங்கள் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளோம். முன்னதாக, நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் ரஹிமுதீன் என்ற நபர் மீது 2019 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இப்போது அவர் தலைமறைவாக உள்ளார்” என்றார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.