குழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

 

குழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

குழந்தை வளர்ப்பு பெரும்பாலும் பெண்களைச் சார்ந்தது என்றே ஒதுக்கப்படுகிறது. உண்மையில் குழந்தை வளர்ப்பு அப்பா – அம்மா இருவரின் பங்களிப்பு கூட்டாகக் கிடைக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அப்போதுதான் அக்குழந்தையின் வளர்ச்சியும் எண்ணவோட்டமும் சீராகவும் சரியாகவும் இருக்கும்.

ஓர் அப்பாவாக குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான வேலைகளை நிச்சயம் செய்ய வேண்டும். அப்போதே அக்குழந்தை சமூகத்திற்கு நல்ல விதமாகக் கிடைக்கும் மனிதராக வளரும். அப்படி நிறைய வேலைகள் இருக்கின்றன என்றாலும் தற்போதைக்கு முதன்மையான ஐந்து விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

குழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

பாலினப் பேதம்: பிங்க் கலரில் பெண் குழந்தைக்கு டிரஸ் எடுப்பதை வழக்கமாகக் கொள்வது சில அப்பாக்களிடம் இருக்கிறது. அதாவது உடையின் நிறத்தின் அடிப்படையில்கூட ஆண், பெண் வேறுபாட்டை க் காட்டுவதாக அமைந்துவிடும். எனவே, உங்கள் குழந்தைகளின் இப்படியான பாலின பேதம் காட்டும் எந்த முயற்சியையும் செய்யாதீர்கள். உங்களையும் தவறி அது நடந்துவிட்டால் அதைத் திறந்த மனத்தோடு ஒத்துக்கொண்டு, குழந்தையிடம் பேசி மாற்றுங்கள். உங்களின் மனமாற்றத்தை குழந்தைகள் அறிந்துகொள்வதில் பெரிய குற்றம் ஏதும் இல்லை. அதற்காக வெட்கப்படாதீர்கள்.

குழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

வீட்டு வேலையும் வேலைதான்: இப்போதைய சூழலில் கணவன் மட்டுமே வேலைக்குச் செல்லும் வீடாக உங்கள் இருக்கும்பட்சத்தில், ஆபிஸ் போய்வருவதோடு உங்கள் வேலை அனைத்தும் முடிந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். வீட்டு வேலையும் வேலைதான். ஒரு பெண் வீட்டு வேலை செய்வதற்கு எட்டு மணிநேரம்தான் என முடிவெடுத்துவிட்டால் பாதி வேலைகள் நடக்காது.  இதைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெரியவர்களாக ஆனதும் இதையே செய்வார்கள்.

எனவே, வேலைக்குப் புறப்படும் குறிப்பிட்ட நேரம் வரையிலும் வேலை முடிந்து வந்து சிறிது ஓய்வுக்குப் பின்பும் வீட்டு வேலைகளில் பங்கெடுங்கள். அதை உங்கள் குழந்தைகள் பார்ப்பார்கள். அவர்களும் எதிர்காலத்தில் உங்களைப் போல வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்ளும் பழக்கத்திற்குள் வருவார்கள்.

குழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

முடிவு என்பது…: வீட்டின் எந்த முடிவையும் ஆண்தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விடாதீர்கள். ஒருவேளை அப்படி இருந்தால் அதை உடனடியாக மாற்றுங்கள். கடைக்குச் செல்வது தொடங்கி பெரிய விஷயம் வரை குடும்பத்தினரோடு சேர்ந்து அமர்ந்து விவாதித்து அந்த முடிவை எடுங்கள். அந்த விவாதத்தில் நிச்சயம் குழந்தைகளும் இருக்க வேண்டும். பெயரளவில் இல்லாமல் அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பண்பை அவர்களும் பின்பற்ற வாய்ப்பு இருக்கும்.

குழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

சமையல்:  வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள் பலரும்கூட சமையல் செய்ய விரும்புவதில்லை. அதிலும் பாத்திரம் கழுவ முற்படுவதே இல்லை. இது தினந்தோறும் நடக்கும் விஷயங்கள். அதனால், உங்கள் குழந்தையின் மனத்தில் இவை எல்லாம் நன்கு பதிந்துவிடும். அதற்கு பிறகு என்ன செய்தாலும் மாற்றுவது சிரமம். எனவே, சமையல், பாத்திரம் கழுவது உள்ளிட்ட வேலைகளை பெண்களுக்கு உரியவை என ஒதுக்கி விடாமல் நீங்களும் பங்கெடுங்கள். அதுவே உங்கள் குழந்தைக்கு நல்ல முன்மாதிரி.

குழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

சேமிப்பு:  இந்தியச் சமூகத்தில் பணம் புழங்குவது பெரும்பாலும் ஆண்கள் கையில்தான். அதனால், அதை எப்படிக் கையாள்வது, எவ்வாறு சேமிப்பது , எவ்வளவு சேமிப்பது என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். அவர்களின் முதல் மாத சம்பளம் முழுவதும் சேமிப்பு என்பதாகத் திட்டமிடுங்கள். அது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.