பெண்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய ஐந்து உணவுகள்!

 

பெண்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய ஐந்து உணவுகள்!

ஆரோக்கியமான உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு அவசியம். சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் கணவன் முதல் பிள்ளை வரை அனைவருக்கும் பார்த்துப் பார்த்து செய்யும் பெண்கள், தங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுவது இல்லை. இதை தவிர்க்க உணவில் தினசரி ஒரு ஐந்து வகையான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைக் காக்க முடியும்.

பெண்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய ஐந்து உணவுகள்!

கீரைகள்

கீரைகள் பலருக்கு பிடிக்காத உணவு. ஆனால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதால் இதை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. கீரையில் இரும்பு, பொட்டாசியம், மக்னீஷியம் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. கீரை பெண்களுக்கு ஏற்படக் கூடிய மாதவிலக்கு பிரச்னை (எம்எஸ்) உள்ளிட்டவற்றைப் போக்கும். இதில் உள்ள கால்ஷியம் எலும்புகளை வலுப்படுத்தும். சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுடன், ஆஸ்துமா பாதிப்பு உள்ளிட்டவற்றில் இருந்து காக்கும்.

ஃபிளாக்ஸ் சீட்

ஃபிளாக்ஸ் எனப்படும் ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் சிறிதளவு ஃபிளாக்ஸ் சீட் சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படும். செரிமானத்தை சீராக்கும், சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் பிரச்னையான இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையில் இருந்து காக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஏ, பி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமானப் பிரச்னை வராது. பெண்களுக்கு மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகள் அதிக அளவில் வரும் என்பதால் இதைத் தவிர்க்க தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காய் கண் பார்வைக்கு நல்லது. இதயத்தின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும்.

முட்டை

தினமும் இரண்டு கோழி முட்டைகளை பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. முடியவில்லை என்றால் ஒன்றாவது சாப்பிட வேண்டும். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். முட்டையில் புரதச்சத்து, கால்சியம் உள்ளிட்டவை அதிகம் உள்ளன. இது எல்லாமே பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியம். இது உடல் எடையைக் குறைத்து, உடலை, எலும்பை உறுதியாக்கும். முடி ஆரோக்கியமாக வளரவும் உதவும்.

மாதுளை

பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை பாதிப்பு வருவது வாடிக்கையாக உள்ளது. ரத்த உற்பத்தியை ஊக்குவிக்க இரும்புச்சத்து உள்ள மாதுளை உள்ளிட்ட பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது மாதுளை. தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தால் உச்சி முதல் பாதம் வரை உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலே சொன்ன உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இதை செய்தால் ஆரோக்கியம் வசப்படும்!