மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய் எது?

 

மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய் எது?

மசாஜ் என்பது உடலுக்கு வலுவூட்டும், புத்துணர்வு தரும், உடலைக் குணப்படுத்தும் பாரம்பரிய நுட்பம் ஆகும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விட்டு உடலில் மசாஜ் செய்யும்போது சருமம் பொலிவு பெறும், தசை, எலும்பு உறுதியாகும், தூக்கம் வரும். நரம்புகள் தூண்டப்படுவதால் உடல் புத்துணர்வு பெறும், வயிறு செரிமான பிரச்னைகள் கூட சரியாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய் எது?

நம் ஊரில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதுதான் வழக்கமாக உள்ளது. என்ன எண்ணெய்யில் மசாஜ் செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யை உடலில் தேய்த்து ஊறவிட்டு மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது ஆலிவ் எண்ணெய் சருமத்தில் மெதுவாக ஊரும். இது தசைகளை தளர்வுபடுத்து, ஈரப்பதத்தை அளிக்கிறது. சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து சரும பிரச்னைகளை போக்குகிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் எனப்படும் சருமத்தில் ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கிறது.

நல்லெண்ணெய்

நல்ணெணெய் தேய்த்து மசாஜ் செய்யும்போது எலும்பு வலு பெறும். நல்லெண்ணெய்யில் தாமிரம், மக்னீஷியம், கால்சியம், ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய், புரதச் சத்து உள்ளது. இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு தேவையான போஷாக்கை அளிக்கிறது. தொடர்ந்து நல்லெண்ணெய் பூசி மசாஜ் செய்தால் முதுமை தாமதப்படும்.

தேங்காய் எண்ணெய்

சருமத்துக்கு நீர்ச்சத்து அளிக்கும் திறன் உள்ளது. லாரிக் அமிலம் உள்ளதால் இது மிகச் சிறந்த ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கலாக செயல்படுகிறது. சருமத்தை சுத்தப்படுத்துகிறது. வைட்டமின் இ மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடண்டாக செயல்படுகிறது.

பாதாம் எண்ணெய்

விலை அதிகம் என்றாலும் உடலுக்கு நன்மை தரக் கூடியது. சருமத்தில் எளிதில் ஊடுருவுகிறது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் ஊட்டச்சத்துக்கள் சூரியனால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கி, முதுமையைத் தாமதப்படுத்துகிறது. மிகச் சிறந்த பூஞ்சைத் தொற்று தடுப்பு பொருளாக இது உள்ளது. எனவே, சருமப் பிரச்னைகள் வராமல் காக்கிறது. சொரியாசிஸ், படர்தாமரை போன்ற பிரச்னை உள்ளவர்கள் இந்த எண்ணெய்யைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

சற்று வாசனை வித்தியாசமாக இருக்கும். இருப்பினும் உடல் வலி வீக்கத்தைப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. குளிர் காலத்தில் சருமம் வறண்டு போய்விடும். அந்த மாதிரியான நேரத்தில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து குளிக்கலாம். சருமம், முடியின் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது. கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது கண்களில் படாமல் கவனமாக இருக்க வேண்டும். கண்ணில் பட்டால் எரிச்சலை ஏற்படுத்திவிடும்.