5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு; தமிழகத்துக்கு இடைத்தேர்தல் இல்லை

 

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு; தமிழகத்துக்கு இடைத்தேர்தல் இல்லை

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. அதேபோல், 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. மேலும், 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேசம் மற்றும் 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

அதேசமயம், தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அம்மாநில சட்டப்பேரவை கலைக்கபப்ட்டது. எனவே, அந்த மாநிலத்துக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதையடுத்து, சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தின் 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 12-ம் முதல்கட்டமாகவும், எஞ்சிய 72 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒரே கட்டமாகவும், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளுக்கு டிசம்பர் மாதம் 11-ம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தேர்தல் பணிகளில் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுவர் என்றும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலான ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை கனமழை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் கட்டி, இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டதால், திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எனவும் ஓ.பி.ராவத் விளக்கமளித்துள்ளார்.