5 கோடி அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன: பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல்

 

5 கோடி அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன: பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல்

5 கோடி பேரின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது

வாஷிங்டன்: 5 கோடி பேரின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் யாராலும் அசைத்து பார்க்க முடியாத மன்னனாக வலம் வருவது பேஸ்புக். வாட்ஸ் ஆப், ட்விட்டர், இன்ஸ்ட்ரா கிராம் போன்ற ஏராளமான சமூக வலைதளங்கள் இருந்தாலும் பேஸ்புக்குக்கு என்று தனி பட்டாளமே இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் பேஸ்புக்கை சாமானியர்களும் மிக எளிமையாக பயன்படுத்தலாம். அதேசமயம் பேஸ்புக் அக்கவுண்ட்கள் அடிக்கடி ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலின் போது பேஸ்புக்கில் இருக்கும் 5 கோடி பேரின் தகவல்களை ”கேம்பிரிட்ஸ் அனாலிட்டிகா” என்ற நிறுவனம் திருடியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தற்போது 5 கோடி பேரின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், 4 கோடி பேரின் அக்கவுண்ட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் பேஸ்புக்கின் இணையதள பக்கத்தில்,  இந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ்(View As) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

தங்களுடைய அக்கவுண்ட்களை மற்றவர்கள் பார்க்கும் போது, அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை நமக்கு நாமே பார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட வசதி தான் இந்த வியூ ஆஸ் எனும் சிறப்பு வசதி.

ஆனால் இந்த வசதி பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் பற்றிய ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பாதுகாப்பு டோக்கனை (security token) அம்பலப்படுத்துகிறது.  அதை பயன்படுத்தி ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் பிறரின் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும். 

எனவே, இப்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.