வரலாறு காணாத உச்சத்தில் பங்குசந்தை – 49,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் ! 

 

வரலாறு காணாத உச்சத்தில் பங்குசந்தை – 49,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் ! 

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத உச்சபட்சமாக  49 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமானது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், கொரோனா தொற்று குறித்த அச்சம் குறையத் தொடங்கி உள்ளன. இதையடுத்து, மக்களிடம் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதுடன், தொழில் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.  கடந்த 2 மாதங்களாக வர்த்தக நடவடிக்கைகள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளன.  டிசம்பர் மாதத்தில்  ஜிஎஸ்டி வருவாய்  சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடந்துள்ளது. ஐடி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட நிறுவனங்கள்,   வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை வளர்ச்சி கண்டு வருகின்றன.

வரலாறு காணாத உச்சத்தில் பங்குசந்தை – 49,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் ! 

இதையடுத்து கடந்த 2 மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 7 ஆயிரம் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்  49 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. சந்தைநேர முடிவில் சென்செக்ஸ்    486 புள்ளிகள் உயர்ந்து  49,269 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 137 புள்ளிகள் உயர்ந்து 14,484 புள்ளிகளாக இருந்தது.


இன்றைய வர்த்தகத்தில் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ், இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி, மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.   டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி பங்குகள்சரிவைக் கண்டிருந்தன. ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் சரிவை கண்டன. கடந்த 2 மாதங்களில் ஒட்டுமொத்தமாக பஜாஜ் ஃபின்சர்வ், ஓ.என்.ஜி.சி மற்றும் எல் அண்ட் டி  பங்குகள்  சுமார் 40 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளன. நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகளில் வளர்ச்சியை நோக்கிய சாதகமான முடிவுகள் காணப்படுவதால்  பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்று வருகின்றன.