46 மாதங்களில் 5,500 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி! சாதனை படைத்த ரயில்வே

 

46 மாதங்களில் 5,500 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி! சாதனை படைத்த ரயில்வே

கடந்த 46 மாதங்களில் நாடு முழுவதுமாக 5,550 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி ஏற்படுத்தி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

இந்தியன் ரயில்வே ரயில் பயணிகளுக்கு சிறப்பான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இன்றைய இன்டர்நெட் உலகத்துக்கு ஏற்ப பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இலவச வை-பை வசதியை நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் வழங்கும் நடவடிக்கையில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. ரயில்வேயின் டிஜிட்டல் நிறுவனமான ரயில்டெல் நிறுவனம்தான் இலவச வை-பை வசதியை அனைத்து ரயில் நிலையங்களில் நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறது.

ரயில் நிலையத்தில் இலவச வை-பை வசதி

2016 ஜனவரியில் நாட்டிலேயே முதல் முறையாக மும்பை மத்திய ரயில் நிலையத்தில் இலவச வை-பை வசதியை ரயில்டெல் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. அது முதல் கடந்த 46 மாதங்களில் நாடு  முழுவதுமாக உள்ள 5,500 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வேயின் கிழக்கு மத்தயி ரயில்வே மண்டலத்தில் வரும் ஜார்க்ண்டின் மஹூவாமிலன் ரயில் நிலையம்தான் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்ட 5,500வது ரயில் நிலையம் என ரயில்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரயில்வயர் பிராண்ட் நெட்வொர்க்

ரயில் நிலையங்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இலவச வை-பை வசதியை பயன்படுத்தி வருகின்றனர். 2019 அக்டோபர் மாதத்தில் மட்டும் ரயில்டெல் நிறுவனம் வழங்கும் ரயில்வயர் வை-பை சேவையை 1.5 கோடி பேர் லாக் இன் செய்துள்ளனர். ஒட்டு மொத்த அளவில் அந்த மாதத்தில் அனைத்து ரயில் நிலையங்களில் 10,242 டி.பி. டேட்டாவை பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.