45 மாதங்களில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: மத்திய அரசு

 

45 மாதங்களில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: மத்திய அரசு

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை அருகே தோப்பூரில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பில் 197 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக கூறப்பட்டது. மேலும் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது எனவும் இது அதிமுக அரசின் மிகப்பெரிய சாதனை என ஆட்சியாளர்கள் பேசி வந்தனர்.

இதற்கிடையே மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த ஹக்கிம் என்பவர்  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். ஹக்கிம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர்டிஐ, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என அதிர்ச்சி தகவலை அளித்தது. இதனால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் சார்பில் நீதிமன்றத்தி இன்று பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தற்போது நிதித்துறை பரிசீலனையில் உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதுல் பெற்ற பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என கூறப்பட்டிருக்கிறது.