மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற 4 மாணவர்கள் பலி!

 

மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற 4 மாணவர்கள் பலி!

மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற சென்னை மாணவன் உட்பட தமிழக மாணவர்கள் நான்கு பேர் நதியில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பெரம்பூர் குக் சாலை பகுதியை சேர்ந்த மோகன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகன் ஸ்டீபன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மருத்துவப் படிப்பிற்காக ரஷ்யாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவர்களுடன் தங்கி படித்து வந்த ஸ்டீபன் நேற்று வோல்கா நதிக்கரைக்கு பத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுடன் விளையாட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சக மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்வதை பார்த்த ஸ்டீபன் அவரை காப்பாற்ற நீரில் குதித்ததாக தெரிகிறது. பிறகு அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு மாணவர்கள் மற்றவர்களை காப்பாற்ற குதித்தபோது 4 பேரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். சில மணிநேரத்திற்குப் பிறகு நான்கு பேரின் சடலம் மட்டும் கரை ஒதுங்கியது. இதனை அடுத்து உடன் விளையாட சென்ற மாணவர்கள் நான்கு பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரஷ்ய போலீசார் நான்கு பேரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற 4 மாணவர்கள் பலி!

விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள், சென்னையயை சேர்ந்த ஸ்டீபன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் என தெரியவந்ததையடுத்து, இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான்கு பேரின் உடலை தமிழகத்திற்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கை ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. கொரோனா காலமென்பதால் நான்கு பேரின் உடல்களை எடுத்து வருவதில் காலதாமதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. உடனடியாக அவர்களது உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் ஏற்பாடு செய்ய வேண்டும் என இறந்து போன ஸ்டீபன் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: வேல்பூஜை செய்து சமூக வலைதளங்களில் போட்டோக்களை தெறிக்கவிடும் பாஜகவினர்!