144 வீடுகளை ஆட்டையப்போட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

 

144 வீடுகளை ஆட்டையப்போட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

கிணறு வெட்டிய ரசீது இருக்குது.. ஆனா, கிணற்றைக்காணோம் என்று சினிமாவில் நடிகர் வடிவேலு சிரிப்புக்காக போலீசில் புகார் கொடுப்பார். ஆனால், இடம் இருக்குது… வீடுகட்டிய ரசீதும் இருக்குது..ஆனா, வீடுகளை காணோம் என்று சீரியசாகவே போலீசில் புகார் கொடுத்திருந்தனர் தலையாமங்கலம் மக்கள்.  அதன் அடிப்படையில் நான்கு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் மத்திய அரசின் தொகுப்பில் 144 வீடுகள் கட்டியதாக பொய்கணக்கு காட்டிய ஊராட்சி ஒன்றிய அலுவலர் ராஜா உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரையிலும் பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள 225 பயனாளிகளுக்கு தலையாமங்கலம் ஊராட்சியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அந்த 225 பயனாளிகளில் 144 பயனாளிகளுக்கு வீடுகட்டிக்கொள்ள பணத்தை கொடுக்காமல், அவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.  அதுமட்டுமல்லாது, மத்திய அரசின் கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் 175 பயனாளிகளுக்கு பணம் கொடுத்தது போல் போல் ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்துள்ளனர்.

கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள் சிலர், சந்தேகத்தின் பேரில் ஆய்வு மேற்கொண்டதில் இந்த மோசடி தெரியவந்தது.  அரசு பதிவேட்டில் 144 பயனாளிகளுக்கு பணம் பல தவணைகளாக வழங்கப்பட்டதாகவும்,  இதற்காக அதிகாரிகள் பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் குறிப்புகள் இருந்தது தெரியவந்தது.  இதே போல் 175 பயனாளிகளுக்கு கழிவறை கட்ட பணம் கொடுத்ததாகவும் பதிவேட்டில் இருந்தது தெரியவந்தது.

இறந்தவர்களின் பெயரிலும், வெளிநாட்டில் இருப்பவர்களின் பெயரிலும் இந்த மோசடி நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தலையாமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த 22 பேர் தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர். ’’இடம் இருக்குது..வீடும்,கழிவறையும் கட்டிய ரசீது இருக்குது. ஆனா, வீடுகளையும், கழிவறைகளையும் காணோம்’’னு அந்தப்புகாரில் கூறியி்ருந்தனர்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தலையாமங்கலம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று(2.8.2020) ஊராட்சி ஒன்றிய அலுவலர் ராஜா உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர, அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர்.  அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தலையாமங்கலம் மக்கள் வலியுறுத்துகின்றனர்.