நடிகர் வரதராஜன் மீது மத்திய குற்ற பிரிவு போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

 

நடிகர் வரதராஜன் மீது மத்திய குற்ற பிரிவு போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

பிரபல நடிகரும் செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “தனது நண்பர் ஒருவருக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சென்றார்.

ஆனால் எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை எனவும், அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று கூறிவிட்டனர். யாரை தொடர்புகொண்டு பேசிய போதும் எந்த பலனும் இல்லை. அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்றும் தெரியவில்லை. அவர் மிகவும் ஒழுக்கமான முறையில் வழிமுறைகளை பின்பற்றி வந்தார். அதனால் தனக்குகொரோனா வராது என யாரும் வெளியில் சுற்றி திரியாதீர்கள்” என்று கூறினார்.

நடிகர் வரதராஜனின் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. டிவி நடிகர், பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார். வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் மற்றும் செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் மீது மத்திய குற்ற பிரிவு போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. தொற்று நோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.