4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்; தொண்டர்கள் உற்சாகம்!

 

4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்; தொண்டர்கள் உற்சாகம்!

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது

சென்னை: தமிழகத்தில் எஞ்சியுள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அத்தொகுதியில் அபார வெற்றி பெற்றார். மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்த அவர், அதன் பொதுச்செயலாளாரக இருந்து வந்தார். எனினும், அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாமல் இருந்தது.

ttv cooker

இதையடுத்து, மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமமுக-வை கட்சியாக பதிவு செய்யாததால் அவருக்கு பொது சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையத்தின் கூற்றை நீதிமன்றம் ஏற்றது.

இருப்பினும், கடும் சட்ட போராட்டத்துக்கு பின்னர் பரிசுப் பெட்டி சின்னத்தை பொதுச் சின்னமாக டிடிவி தினகரன் பெற்றார். தொடர்ந்து, நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர்.

அதேபோல், நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தரப்பு உறுதியளித்தது. அதன்படி, தினகரன் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு அமமுக-வை கட்சியாக பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

election commission

இதனிடையே, தமிழகத்தில் விடுபட்ட அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே மாதம் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ், சூலூர் தொகுதியில் கே சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் அமமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதேசமயம், இந்த தொகுதிகளுக்கும் தங்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தையே ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு, நடைபெற உள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான சின்னமாக பரிசு பெட்டகத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் வாசிங்க

மு.க.அழகிரிக்கு அதிரடியாக ஆப்பு வைத்த பாஜக… அஞ்சாநெஞ்சனை அலறவிடும் பகீர் பின்னணி இதுதான்..!