மதுரைக்கு 3வது கேந்திரிய வித்யாலயா! – இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த வெங்கடேசன் வலியுறுத்தல்

 

மதுரைக்கு 3வது கேந்திரிய வித்யாலயா! – இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த வெங்கடேசன் வலியுறுத்தல்

நீண்ட கோரிக்கை, நடவடிக்கைக்குப் பிறகு மதுரைக்கு மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய உள்ளது என்றும், தாமதிக்காமல் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்றும் மதுரை எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை இடையபட்டியில் அமைந்துள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர் படை வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய பள்ளியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டுமென இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடமும் கேந்திரிய வித்யாலயா ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மதுரைக்கு 3வது கேந்திரிய வித்யாலயா! – இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த வெங்கடேசன் வலியுறுத்தல்
மதுரைக்கு மற்றுமொரு கேந்திரிய வித்யாலயா வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று இடையபட்டி இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர் படை வளாகத்தில் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அனுமதி கிடைக்கப் பெற்றாலும் பள்ளியைத் தொடங்குவதற்கான நடைமுறைகள் காலதாமதப்பட்டே வந்தன. நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவுடன் இந்த புதிய பள்ளி தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களைக் கேட்டறிந்தேன். குறிப்பாக, இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர் படை வளாகத்தில் நிலத்தைப் பள்ளிக்கு வழங்குவதில் காலதாமதம் இருப்பதை அறிந்தேன். நிலத்தைத் தர ஒப்புதல் தரவேண்டிய உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவர்களை அணுகி அந்நிலத்தை விரைந்துதரும்படி கேட்டுக்கொண்டேன்.

மதுரைக்கு 3வது கேந்திரிய வித்யாலயா! – இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த வெங்கடேசன் வலியுறுத்தல்
மக்களவை உறுப்பினர் மற்றும் மனிதவள மேம்பாட்டு நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் வலியுறுத்தி வந்தேன். தற்போது பள்ளிக்கான நிலம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புதிய மாணவர் சேர்க்கையை காலதாமதப்படுத்தாமல் இவ்வாண்டே தொடங்குவது மக்களுக்குப் பயன்தரும். இன்னும் குறிப்பாக நோய்த்தொற்று பரவல் காலத்தில் அருகில் மத்திய அரசின் பள்ளி ஒன்று அமைவது மாணவர்களுக்குப் பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் அமையும் என்பதால், உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கும் கேந்திர வித்தியாலயா ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.