ஒரு லிட்டர் பெட்ரோல் கேரளாவில் ரூ.39, தமிழகத்தில் ரூ.20! ராமர்பிள்ளை அதிரடி அறிவிப்பு!

 

ஒரு லிட்டர் பெட்ரோல் கேரளாவில் ரூ.39, தமிழகத்தில் ரூ.20! ராமர்பிள்ளை அதிரடி அறிவிப்பு!

வரும் 10ம் தேதியில் இருந்து ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலை ரூபாய் 39க்கு வழங்க இருப்பதாக ராமர்பிள்ளை அறிவித்துள்ளார்.

மூலிகைகளில் பெட்ரோல் தயாரிப்பதாக சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ராமர்பிள்ளை. ராமர்பிள்ளையின் இந்த அறிவிப்பு சாமானியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால், இது விஞ்ஞானிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

1990 ஆண்டுக்கு பின்னர் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் என்றும், அதற்காக விற்பனை ஏஜென்சிகள் அமைக்கப்போவதாகவும் அறிவித்த ராமர்பிள்ளை, ஏஜென்சி வழங்குவதாக பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது ஒரு புறம் இருக்க, தனது மூலிகை பெட்ரோல் கனவு திட்டத்தை நிறைவேற்ற தொடர் போராட்டம் நடத்தி வந்தார் ராமர்பிள்ளை.

அரசு அனுமதி அளிக்காமலேயே, ‘ராமர் பெட்ரோல்’ என்ற பெயரில், டொலுவீன்,நாஃப்தா மூலப்பொருட்களை கலந்து பெட்ரோலை விற்று வந்தார். இதனால் மோட்டார் எரிபொருள் வாகன சட்டத்தின்படி அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

இதையடுத்து அவரைப்பற்றின விபரம் எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கருணை மனு என்ற வீடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மக்களிடையே மூலிகை பெட்ரோல் பார்முலாவை கொண்டு சேர்ப்பேன். இதற்கு பிரதமர் மோடியும்,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் உதவ வேண்டும். இல்லை என்றால் தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்ற உருக்கமாக தெரிவித்திருந்தார்.

என்ன நடந்தோ தெரியவில்லை. மூலிகை பெட்ரோல் பார்முலாவை ராமர்பிள்ளை மக்களிடையை அறிவிக்கவில்லை. அதன் பின்னர் ராமர்பிள்ளையும் எந்த தகவலும் சொல்லவில்லை.

இந்நிலையில், வரும் 10ஆம் தேதி அன்று 39 ரூபாயில் மூலிகை பெட்ரோலை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக கேரளா அரசு மூணாறுபகுதியில் 1600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிடு செய்து, மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்க அனுமதி அளித்துள்ளது.
என் மூலிகை பெட்ரோலில் கெமிக்கல் எதுவும் கலக்கவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளேன்.

கேரளாவில் 77 இடங்களில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்க இருக்கிறோம். கேரளாவில் வரியுடன் சேர்த்து 39 ரூபாய்க்கு மூலிகை பெட்ரோல் வழங்கப்போகிறோம். தமிழகத்தில் தயாரிக்க முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். தமிழகத்தில் 20 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளோம் என்று சொல்லி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.