35 ரூபாயால் ஏர்டெல்லுக்கு வந்த சோதனை!

 

35 ரூபாயால் ஏர்டெல்லுக்கு வந்த சோதனை!

மாதந்தோறும் கட்டாயம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் கிராமப்புறங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

2016ம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்த பிறகு அந்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்களை ஈர்க்க ஜியோ நிறுவனம் அறிவித்த சலுகைகளால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. மேலும், பல சின்ன நிறுவனங்கள் இதற்கு மேலும் இருந்தால் முதலுக்கே மோசமாகி விடும் என்று தொலைத்தொடர்பு துறையை விட்டு ஒடி விட்டன.

ஜியோ

தற்போது ஜியோவின் போட்டியை சமாளித்து பார்திஏர்டெல்,வோடாபோன்-ஐடியா, பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஏதோ காலத்தை தள்ளி வருகின்றன. இந்நிலையில், வருவாய் இழப்பை ஈடுசெய்ய பார்திஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 35 ரூபாய்க்கு கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தன. இல்லையென்றால் சேவை துண்டிக்கப்படும் என்று கூறின. 

ஏர்டெல்

35 ரூபாய் ரீசார்ஜ் நடைமுறைக்கு வந்தது முதல் ஏர்டெல் நிறுவனம் கிராமபுறத்தில் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களில் கிராமப்புறத்தினர் பங்கு 45.86 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2018 டிசம்பர் இறுதியில் 49.56 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

ஏர்டெல் நிறுவனம் கிராமப்புற வாடிக்கையாளர்களை இழந்துவரும் சூழ்நிலையில் கிராமப்புறங்களில் ஜியோ சேவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் இறுதிநிலவரப்படி, ஜியோவின் மொத்த இணைப்புகளில் கிராமப்புற வாடிக்கையாளர்களின் பங்கு 37.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் இறுதியில் 35.87 சதவீதமாக இருந்தது.