`எங்க கடை காத்தாடியது; உதயா கடையில் கூட்டம் அதிகரித்தது!’- கோழிக்கடையால் நண்பனை கொன்ற வாலிபர்கள்

 

`எங்க கடை காத்தாடியது; உதயா கடையில் கூட்டம் அதிகரித்தது!’- கோழிக்கடையால் நண்பனை கொன்ற வாலிபர்கள்

கோழிக்கறிக் கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை படுகொலை செய்துள்ளனர் வாலிபர்கள். இந்த அதிர்ச்சி சம்பவம் அம்மாப்பேட்டையில் நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உதயா (30) என்பவர் அங்குள்ள சந்தையில் தேவி பிராய்லர்ஸ் என்ற பெயரில் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தார். கடந்த 4ம் தேதி இரவு 10.30 மணியளவில், தனது கடைக்கு எதிர்ப்புறமுள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார் உதயா. 5ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் முழு ஊரடங்கு இருந்தது. இதனால் அதிக மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிட்டிருக்கிறார் உதயா. மதுபாட்டில் வாங்க உதயா வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், திடீரென உதயாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பித்துச் செல்ல உதயா முயன்றபோது அவரது முகத்திலேயே கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடினர்.

`எங்க கடை காத்தாடியது; உதயா கடையில் கூட்டம் அதிகரித்தது!’- கோழிக்கடையால் நண்பனை கொன்ற வாலிபர்கள்

இந்த நிலையில் உதயாவின் நண்பர்களான சுபாஷ் (32), மணிகண்டன் (32) ஆகியோர் மீது சந்தேகப்பார்வை விழுந்தது காவல்துறையினருக்கு. இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ” உதயாவின் கடைக்கு அருகிலேயே நாங்கள் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தோம். இது உதயாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் எங்களிடம் உதயா அடிக்கடி தகராறு செய்து வந்தார். உதயாவின் கடைக்கு கூட்டம் அதிகமாக சென்றது. எங்கள் கடை காத்தாடியது. இதனால் உதயாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி உதயாவை படுகொலை செய்தோம்” என்று கூறியுள்ளனர்.

2015ம் ஆண்டு உதயா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாக உதயா கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம் என்கிறது போலீஸ்.