30 வயது பெண்ணின் வயிற்று வலிக்கு சிகிச்சை – அவள் ஒரு ‘ஆண்’ என தெரியவந்த விசித்திர சம்பவம்

 

30 வயது பெண்ணின் வயிற்று வலிக்கு சிகிச்சை – அவள் ஒரு ‘ஆண்’ என தெரியவந்த விசித்திர சம்பவம்

கொல்கத்தா: 30 வயது பெண்ணின் வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்தபோது அவள் பெண்ணே அல்ல…அவள் ஒரு ‘ஆண்’ என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

வங்காளத்தின் பிர்பூம் பகுதியில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு அடி வயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் அனுபம் தத்தா மற்றும் சவுமன் தாஸ் ஆகியோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது தான் அந்தப் பெண்ணின் உண்மையான அடையாளத்தை அவர்கள் கண்டறிந்தனர்.

ஆம்…அவள் ஒரு பெண் அல்ல. அவள் ஒரு ஆண் என்ற உண்மை தெரியவந்தது.

பிறந்ததில் இருந்து முப்பது ஆண்டுகளாக அவர் எந்தவித சிக்கல்களும் இல்லாத ஒரு பெண்ணாகவே சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மார்பகங்கள், பிறப்புறுப்பு, குரல் என அனைத்தும் பெண்ணாகவே அவரது உடல் அமைப்பு அமைந்துள்ளது. ஆனால் பிறந்ததில் இருந்தே அவருக்கு கருப்பைகள் இல்லை. அதேபோல பிறந்ததில் இருந்தே அவளுக்கு ஒருபோதும் மாதவிடாய் ஏற்பட்டதில்லை என்று மருத்துவர்களின் சோதனையில் தெரியவந்துள்ளது.

பொதுவாக 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த மிக அரிதான ஆன்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சின்ரோம் நோய் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இங்கு ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் 28 வயதான சகோதரியை சோதனை செய்ததில் அவளும் ஒரு ஆண் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஒரு நபர் மரபணு ரீதியாக ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணின் அனைத்து உடல் பண்புகளையும் கொண்டிருப்பார்கள்.