30 கிராம மக்கள் குவிந்தனர்! மீன்பிடி திருவிழாவில் தடியடி!

 

30 கிராம மக்கள் குவிந்தனர்! மீன்பிடி திருவிழாவில் தடியடி!

ண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள் பலவும் கொரோனா ஊரடங்கினால் நடைபெறாமல் உள்ளன. ஆனால், விழுப்புரம் மீன்பிடி திருவிழாவை மட்டும் அம்மாவட்ட மக்கள் விடாப்பிடியாக நின்று நடத்திகாட்டிவிட்டனர். 30 கிராம மக்கள் இந்த திருவிழாவில் குவிந்ததால், தனி மனித இடைவெளி எல்லாம் காற்றில் பறந்ததால், போலீசார் தடியடி நடத்தினர்.

விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியை குத்தைகைக்கு எடுப்போர், அதில் மீன் குஞ்சுகள் விட்டு வளர்த்து, மீன்களை ஏலம் விட்டுவிடுவார். மிச்சம் இருக்கும் மீன்களை பிடிக்காமலே சென்றுவிடுவர். மீன் பிடி திருவிழாவை கவனத்தில்கொண்டுதான் எல்லா மீன்களையும் பிடிக்காமல் மீன்களை விட்டுவைப்பார்கள்.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், ஆடிப்பெருக்கு முடிந்த பின்னர் ஒருநாளில் சுற்றுவட்டாரத்து மக்கள் கூட்டாக சேர்ந்து அந்த மீன்களை பிடித்து, பங்கிட்டுக்கொள்வர். கொரோனா ஊரடங்கை எல்லாம் கண்டுகொள்ளாமல், வழக்கம் போலவே, நேற்றும் இந்த மீன்பிடி திருவிழா களைகட்டியது.

30 கிராம மக்கள் குவிந்தனர்! மீன்பிடி திருவிழாவில் தடியடி!

கல்பட்டு, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, தெளி, சிறுவாக்கூர், அருளவாடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏரிக்குள் இறங்கி கெண்டை, ஜிலேபி, கட்லா, ரோகு, கெழுத்தி உள்ளிட்ட மீன்களை போட்டி, போட்டு பிடித்தனர்.

தகவல் அறிந்தது விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இதுபோன்று ஊரடங்கை மீறி கூட்டமாக மீன்பிடி திருவிழாவை நடத்தக்கூடாது என்றும், உடனடியாக கலைந்து செல்லும்படியும் ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், பொதுமக்கள் கலைந்து செல்லாததால் போலீசார், ஏரிக்குள் இறங்கி தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தடியடியால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

கொண்டாட்டத்தில் முடியும் திருவிழா இந்த வருடம் பதற்றத்தில் முடிந்தது.