30 மணி நேரத்துக்கு பிறகு பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் விடுதலை

 

30 மணி நேரத்துக்கு பிறகு பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் விடுதலை

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அம்மாநில தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், லேண்ட்லைன் என அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பரூக் அப்துல்லா

நாட்கள் செல்ல செல்ல அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கியதையடுத்து காஷ்மீர் நிர்வாகம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது. பின் லேண்ட் லைன் இணைப்புகளை வழங்கியது. தற்போது காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவித்து வருகிறது. இந்நிலையில் சுமார் 72 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை முதல் செல்போன் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டது. ஆக, காஷ்மீர் தனது இயல்பு நிலைக்கு முற்றிலும் திரும்பி விட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் உள்ள பிரதாப் பூங்காவில், சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் மகள் சபியா உள்பட 13 பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

பரூக் அப்துல்லா சகோதரி சுரையா அப்துல்லா

இந்நிலையில் 30 மணி நேரம் கழித்து நேற்று மாலை அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 107வது பிரிவின்படி, கைதான பெண்கள் அனைவரும் தனித்தனியாக ரூ.10 ஆயிரம் மதிப்பு தனிநபர் பத்திரம், ரூ.40  ஆயிரத்துக்கு ஷ்யூரிட்டி வழங்கினர். மேலும் அமைதியை பேணுவதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.