30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வருஷம் தங்கம் விற்பனை அடி வாங்கும்?…

 

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வருஷம் தங்கம் விற்பனை அடி வாங்கும்?…

லாக்டவுனால் இந்த ஆண்டில் தங்கம் விற்பனை சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள்.

தங்க நகைகள்

இந்த ஆண்டில் தங்கம் விற்பனை சென்ற ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறையும் என அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் என்.ஆனந்த பத்மநாபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இது போன்ற தேவை பேரழிவு நிகழ்வதை இதுவரை நாங்கள் பார்த்தது இல்லை. லாக்டவுன் சமயத்தில் விற்பனை ஜீரோ. 2019ம் ஆண்டில் 690.4 டன் தங்கம் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டில் 350 டன் முதல் 400 டன் என்ற அளவில்தான் விற்பனை இருக்கும். இது 1991ம் ஆண்டு பிறகான மிக குறைந்த விற்பனையாக இருக்கும்.

லாக்டவுனால் நகை கடைகள் அடைப்பு

பொதுவாக திருமணத்துக்காக அதிகளவில் தங்கம் வாங்குவார்கள். பொதுவாக திருமணங்கள் கோடை காலத்தில் அதிகளவில் நடைபெறும். இந்த ஆண்டு லாக்டவுனால் திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது ஆபரண துறைக்கு பெரிய பின்னடைவாகும். சில மாதங்களில் இயல்பு நிலை திரும்பும், இந்த ஆண்டு இறுதிக்குள் தேவையை புதுப்பிக்க முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.