கிசான் திட்டத்தில் முறைகேடு: திருவாரூரில் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

 

கிசான் திட்டத்தில் முறைகேடு: திருவாரூரில் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

திருவாரூரில் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் மோசடி செய்த 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது அண்மையில் அம்பலமானது. இதனையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, எந்தெந்த மாவட்டங்களில் மோசடி நடந்திருக்கிறது என்பதையும் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தனர். சில நாட்களுக்கு முன்னர் கிசான் மோசடி குறித்து பேசிய வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங், ரூ.110 முறைகேடு நடந்துள்ளதாகவும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மோசடி நடந்திருப்பதாகவும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கிசான் திட்டத்தில் முறைகேடு: திருவாரூரில் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

இதனைத்தொடர்ந்து மோசடி செய்த நபர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறுமாறு அரசு உத்தரவிட்டதன் பேரில், பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

முத்துப்பேட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளரும் நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி உதவி மேலாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆட்சியர், தகுதியற்ற 2,383 பயனாளிகள் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ரூ.69 லட்சம் பெறவேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.