2ம் அலை பரவலில் வெளிப்பட்ட மூன்று புதிய அறிகுறிகள்!

 

2ம் அலை பரவலில் வெளிப்பட்ட மூன்று புதிய அறிகுறிகள்!

கொரோனா தொற்று ஏற்பட்டால் தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்படும். இவை எல்லாம் பொதுவாக காணப்படும் அறிகுறிகள். சிலருக்கு சுவை உணர்வு குறையும். வாசனை தெரியாமல் போகும் இது சிலருக்கு மட்டும் ஏற்படும் அறிகுறியாக இருந்தது. தற்போது 2ம் அலை பரவலில் கொரோனா வேறு சில அறிகுறிகளை வெளிப்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2ம் அலை பரவலில் வெளிப்பட்ட மூன்று புதிய அறிகுறிகள்!

புதிய ஆய்வுகள் படி காய்ச்சல், சுவாசப் பிரச்னை, சுவை, மனம் தெரியாத நிலை, தொண்டை வலி, உடல் வலி ஆகியவற்றுடன் கண்கள் பிங்க் நிறத்துக்கு மாறுவது. வயிறு செரிமானக் கோளாறு ஏற்படுவது, காது கேட்கும் திறன் குறைவது, திடீரென்று காது சுத்தமாக கேட்காத சூழல் ஏற்படுவது 2ம் அலை பரவலின் அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

புதிய மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் பரவும் போது அது கண்கள் சிவத்தல், பிங்க் நிறத்துக்கு மாறுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். இதனுடன் கண் வீக்கம், தொடர்ந்து கண்ணீர் வெளியேறுதல் ஆகிய பிரச்னையும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காது கேட்கும் திறன் குறைவதுதான் விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதிய மாறுபாடு அடைந்த கொரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கு காது கேட்கும் திறன் குறைந்ததாக தெரிவித்துள்ளனர். சிலர் முற்றிலும் காது கேட்கவில்லை. கேட்கும் திறன் முழுவதும் இழந்தவர்கள் ஆகிவிட்டோமோ என்று அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கட்டுரை ஜர்னல் ஆஃப் ஆடியாலஜி என்ற மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது. இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 7.6 சதவிகிதம் பேருக்கு காது கேளாமை இருந்ததாக தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட பலருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், வயிற்று வலி ஆகியவை தென்பட்டுள்ளது. உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்னை இருந்தால், இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் அது நீடித்தால் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்கின்றனர்.

எனவே, அதீத சோர்வு, வழக்கத்துக்கு மாறான இருமல், கண்கள் சிவத்தல் அல்லது பிங்க் நிறமாதல், கண்ணில் நீர் வழிதல், காது கேட்கும் திறன் குறைதல், வயிறு செரிமான பிரச்னை இருந்தால் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.

புதிது புதிதாக வெளிப்படும் கொரோனா பல்வேறு பாதிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. மக்கள் இன்னொரு முழு ஊரடங்கை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது, வெளியே செல்லும்போது முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் முழு ஊரடங்கு ஆபத்தைத் தவிர்க்கலாம்.