`மாஸ்க் போட முடியாது; நர்ஸூக்கு கன்னத்தில் பளார்!’- ஆஸ்பத்திரியில் குடிமன்னர்கள் அட்ராசிட்டி

 

`மாஸ்க் போட முடியாது; நர்ஸூக்கு கன்னத்தில் பளார்!’- ஆஸ்பத்திரியில் குடிமன்னர்கள் அட்ராசிட்டி

விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற வந்த குடிமன்னவர்கள் மாஸ்க் அணிந்து வராததால் நர்ஸ் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார். இதனால், கொந்தளித்த குடிமன்னர்கள், நர்ஸின் கன்னடத்தில் அறைந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ளது கொளத்தூர் . இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சகாயமேரி என்பவர் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் போதையில் விழுந்து காயம் அடைந்த மூன்று குடிமன்னர்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். அப்போது, பணியில் இருந்த நர்ஸ் சகாயமேரி, “மாஸ்க் அணிந்து வாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்” என்று கறாராக கூறியுள்ளார். இதனால் கொந்தளித்த குடிமன்னர்கள், நர்ஸ் சகாயமேரியின் கன்னத்தில் அடித்ததோடு, ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் மருத்துவமனையில் இருந்த மேஜை, நாற்காலி, அங்கிருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்து சூறையாடியதோடு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து, காவல்துறையில் நர்ஸ் சகாயமேரி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரகளையில் ஈடுபட்ட கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்ரம், சுந்தரபிரகாசம், விமல்ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிய சொல்லி வலியுறுத்தியும் குடிமன்னர்கள் மாஸ்க் அணியாமல் அரசு மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீது தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.