`நாங்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள்; உங்க வீட்டை சோதனை செய்யணும்!’- மளிகை கடைக்காரர் மனைவியை அதிரவைத்த கும்பல்

 

`நாங்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள்; உங்க வீட்டை சோதனை செய்யணும்!’- மளிகை கடைக்காரர் மனைவியை அதிரவைத்த கும்பல்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்று கூறிய வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஈரோடு சுண்ணாம்பு ஓடை ரோஜா கார்டனில் மளிகை கடை நடத்தி வருபவர் ராமநாதன். சம்பவத்தன்று இவரது மனைவி ரேவதி ( 55) வீட்டில் தனியாக இருந்துள்ளார். திடீரென வந்த 3 பேர், நாங்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்று கூறியதோடு, “உங்கள் கடையில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதனால் உங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம்’ என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி, கணவர் ராமநாதனை செல்போனில் தொடர்வு கொண்டுள்ளார். அப்போது, அவர்கள், ‘உங்கள் கணவரை கைது செய்துள்ளோம்’ என்று கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, சோதனை என்ற பெயரில் வீட்டிலிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு ரேவதியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்த தப்பி சென்றது. இதன் பின்னர் கணவருக்கு போன் செய்துள்ளார் ரேவதி. அப்போது, கடையில் இருப்பதாக ராமநாதன் கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு வந்தது போலி அதிகாரிகள் என்று தெரியவந்தது ரேவதிக்கு. இதையடுத்து, கருங்கல்பாளையம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அதிகாரிகள் போல் நடித்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே, கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த மூன்று பேரும் ரேவதி வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பாலாஜி (25), கோகுலகிருஷ்ணன் (19), சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த கிஷோர் (25) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த மூன்று பேரும், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.