3 வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி பணி தொடக்கம்… இந்திய மருந்து நிறுவனம் தகவல்..

 

3 வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி பணி தொடக்கம்… இந்திய மருந்து நிறுவனம் தகவல்..

கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி பணியை 2 முதல் 3 வாரங்களுக்குள் தொடங்க உள்ளதாக இந்திய மருந்து நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் உலக நாடுகள் தற்சமயம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

ஆய்வகத்தில் பரிசோதனை

இந்த சூழ்நிலையில் புனேவை சேர்ந்த மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் மேலும் கூறுகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி மனித மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றால் அக்டோபர் மாதத்தில் மருந்தை சந்தைக்கு  கொண்டு வந்து விடலாம் என நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கு புதிய ஆலையை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கே 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதனால் புனேவில் தனது மருந்து தயாரிப்பு நிறுவன ஆலையிலேயே, கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மனித பாதுகாப்பு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. மருத்துவ பரிசோதனைகளின் முதல் கட்டத்துக்குள் நுழைந்த 6வது கொரோனா தடுப்பூசி இதுவாகும். இதனால் விரைவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து சந்தைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.