3 மாதமாக கொரோனா வைரஸ் எட்டி பார்க்காத சிக்கிம் மாநிலம்…. மாநில அரசின் திறன் மிக்க நடவடிக்கைக்கு கிடைத்த பலன்…

 

3 மாதமாக கொரோனா வைரஸ் எட்டி பார்க்காத சிக்கிம் மாநிலம்…. மாநில அரசின் திறன் மிக்க நடவடிக்கைக்கு கிடைத்த பலன்…

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோதிலும், கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக சிக்கிம் விளங்குகிறது. அம்மாநில அரசின் திறன் மிக்க தடுப்பு நடவடிக்கைகளே இதற்கு காரணம்.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அதேசமயம் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவற்றில் அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொண்ட லாக்டவுன் மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அந்த மாநிலங்களில் கொரோனா பெரிய அளவில் பரவது தடுக்கப்பட்டது.

சிக்கிம்

குறிப்பாக சிக்கிம் மாநிலம் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக விளங்குகிறது. கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த மார்ச் 5ம் தேதி முதல், சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு தடை, நாது லாவுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தி வைப்பது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக பேசப்படும் மற்றும் பயனுள்ள இன்னர் லைன் அனுமதி போன்ற அம்மாநில அரசின் செயல்மிக்க நடவடிக்கைகளால் அங்கு ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை.

முதல்வர் பிரேம் சிங் தமாங்

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராண்டிகாரி மோர்ச்சா அரசு, நாது லா சர்வதேச எல்லைக்கு அருகே சீனா-இந்தியா வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு கடுமையான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை தொடங்கியது மற்றம் அதன் முடிவுகள் அனைவரும் முன்னால் உள்ளது என தெரிவித்தார்.