3 மாதத்தில் ரூ.206 கோடி லாபம்…… பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் அறிவிப்பு…. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் மைண்ட்ட்ரீ…

 

3 மாதத்தில் ரூ.206 கோடி லாபம்…… பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் அறிவிப்பு…. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்  மைண்ட்ட்ரீ…

மைண்ட்ட்ரீ நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.206 கோடி ஈட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மைண்ட்ட்ரீ நிறுவனம் சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.206 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.9 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.198.4 கோடி ஈட்டியிருந்தது.

பணம்

கடந்த மார்ச் காலாண்டில் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிகர வருவாய் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.2,050.5 கோடியாக உயர்ந்துள்ளது. மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு சென்ற நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.10 வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான டெபாஷிஸ் சாட்டர்ஜி கூறுகையில், எவ்வாறாயினும், தொடர்ச்சியான வணிக திட்டத்தின் அடிப்படையில் உலகளாவிய நெருக்கடியை கையாள்வதற்கு நிறுவனம் நன்கு வசதி கொண்டுள்ளது. மேலும் அவை தொடர்ந்து லாபகரமான வளர்ச்சியை தரும் மற்றும் பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

மைண்ட்ட்ரீ அலுவலகம்

கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் 307 வாடிக்கையாளர்கள் ஆக்டிவ்வாக உள்ளனர். இதில் 1 கோடி அமெரிக்க டாலர் வர்த்தக மதிப்பிலான 23 வாடிக்கையாளர்களும் அடங்குவர். மேலும் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 21,991ஆக உள்ளது. மேலும் 12 மாத காலத்தில் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் 17.4 சதவீதமாக உள்ளதாக மைண்ட்ட்ரீ நிறுவனம் தெரிவித்துள்ளது.