3 ஆண்டுகளாகக் கழிவறையில் வசிக்கும் 72 வயது மூதாட்டி..!

 

3 ஆண்டுகளாகக் கழிவறையில் வசிக்கும் 72 வயது மூதாட்டி..!

பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவரின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த மூதாட்டி தற்போது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கனிகா கிராமத்தில் வசித்து வருபவர் 72 வயது மூதாட்டி திரெளபதி பெஹெரா. பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவரின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த மூதாட்டி தற்போது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக வீடு இல்லை. மாநில அரசிடம் இருந்து தங்குமிடம் பெறத் தவறியதால் கடந்த மூன்று ஆண்டுகளாக கனிகா கிராம நிர்வாகத்தால் கட்டப்பட்ட கழிவறையிலேயே தங்கி வருகிறார். அதிலேயே தான் சமையல் செய்வது, தூங்குவது உள்ளிட்ட அனைத்தையும் செய்து வருகிறார். 

ttn

இது குறித்துப் பேசிய மூதாட்டி திரெளபதி, “சமைப்பது, தூங்குவது எல்லாமே இந்த சிறிய அறையில் தான். என் மகளும் பேரனும் இதன் வெளியே தூங்குவார்கள். அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இது வரை எந்த வீடும் வழங்கவில்லை. அரசிடம் இருந்து வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

ttn

மூதாட்டி கழிவறையில் தங்குவது குறித்துப் பேசிய கிராம நிர்வாகிகள், அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. அரசுத் திட்டத்தின் கீழ் ஏதேனும் வீடு வழங்கப்பட்டால், அவருக்கு அதனை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்துப் பேசிய மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் சத்யா மொஹந்தி, கழிவறையில் தங்குவது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். மத்திய அரசும், ஒடிசா அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

ttn