நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில் அசத்தும் விவசாயி

 

நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில்  அசத்தும் விவசாயி

சம்பங்கி மலர் தோட்டம் வைத்திருக்கும் விவசாயி அந்தத் தோட்டத்தில் களை எடுக்க நேரத்தையும் செலவையும் மிச்சம் செய்யும் சைக்கிள் ஏர் கலப்பையை உருவாக்கி அதை தனது மகனுடன் இயக்கிவருகிறார்.

நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில்  அசத்தும் விவசாயி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அசூர் கிராமம். இந்த கிராமத்தில் நாகராஜ் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் சம்பங்கி மலர் சாகுபடி செய்து வருகிறார். இந்த சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். செலவும் அதிகமாகிறது. இதனால் அவர் சைக்கிள் ஏர் கலப்பையை பயன்படுத்தி தானே களை எடுத்து வருகிறார். அதற்கு அவரது மகன் மட்டுமே உதவியாக இருக்கிறார்.

இப்போதெல்லாம் 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு விவசாய தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் களை எடுக்க ஆள் கிடைப்பதில்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும் கூட ஒரு ஏக்கருக்கு 5 நாட்களில் களை எடுக்க 40 ஆள் கூலியாக 6000 ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி எட்டு முறை களை எடுக்க வேண்டும். அதனால் களை எடுப்பதற்கு மட்டுமே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில்  அசத்தும் விவசாயி

விவசாயி நாகராஜுக்கு இது சிரமமாக இருந்தது. பணத்தை கொடுத்தும் கூலியை கொடுத்தும் ஆட்களை கொண்டு வருவதற்கு பெரும்பாடாக இருக்கிறதே என்று கவலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நாகராஜ், அங்கே ஒரு விவசாயி சைக்கிளில் ஒருபகுதியில் ஏர் கலப்பையை பொருத்தி மலர் தோட்டத்தில் களை எடுப்பதை பார்த்திருக்கிறார். இதையே நாம் முயற்சிக்கலாமே என்று தன் ஊருக்கு வந்து தன் வீட்டில் இருந்த ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அதன் ஒரு பக்க டயரையும் வீல்-ஐயும் கழற்றிவிட்டு அந்தப் பகுதியில் அதாவது முன்பக்க டயரையும் வீல்-ஐயும் கழற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏர் கலப்பையை கொடுத்து கயிறு மூலம் இழுத்துச் செல்கிறார். பின்னால் அவரது மகன் ஏர் கலப்பையை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சைக்கிள் ஏர் கலப்பையை இயக்குவதற்கு இரண்டு பேர் மட்டுமே போதும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்து மணி நேரத்திற்குள் களை எடுத்து விடுவதாக சொல்கிறார் நாகராஜ். இந்த சைக்கிள் ஏர் கலப்பை செய்வதற்கு வெறும் 3 ஆயிரம் மட்டுமே செலவானது என்று சொல்லும் நாகராஜ், நேரமும் செலவும் மிச்சம் ஆவதால் வருமானம் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.