டாஸ்மாக் திறப்பு…உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேவியட் மனுவை நினைவுபடுத்தும் மகளிர் ஆயம்

 

டாஸ்மாக் திறப்பு…உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேவியட் மனுவை நினைவுபடுத்தும் மகளிர் ஆயம்

கொரோனா பெருந்தொற்றின் இராண்டாவது அலை மக்களைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ள இச்சூழலில், தி.மு.க. அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் திறந்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் மகளிர் ஆயம் தலைவர் ம. இலெட்சுமி.

டாஸ்மாக் திறப்பு…உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேவியட் மனுவை நினைவுபடுத்தும் மகளிர் ஆயம்

பெருந்தொற்று பரவிவிடக் கூடும் என தேநீர் கடைகளைக் கூடத் திறக்க அனுமதி மறுத்த சூழலில், தொற்றுப் பரவல் ஆபத்து மட்டுமின்றி மக்களின் உயிருக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும் மதுக்கடைகளைத் திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வேதனையான நகை முரணாக உள்ளது என்று சொல்லும் இலெட்சுமி,

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளால் இளைஞர்கள் தங்கள் ஆளுமையை இழந்து, உடலுழைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இலட்சக்கணக்கானக் குடும்பங்கள் நிம்மதியின்றி தவிக்கின்றன. சாலை விபத்துகள் ஏற்படுவதற்கும் மதுவே முதன்மையான காரணமாக உள்ளது. எனவேதான், மகளிர் ஆயம் உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு செயலாக்கப்பட வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றன என்கிறார்.

டாஸ்மாக் திறப்பு…உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேவியட் மனுவை நினைவுபடுத்தும் மகளிர் ஆயம்

மேலும், கடந்த ஆண்டு (2020) அ.தி.மு.க. அரசு, கொரோனா முடக்கக்காலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி மதுக்கடைகளைத் திறக்கலாம் என அறிவித்த போது, மகளிர் ஆயம் அதனை எதிர்த்து 28.04.2020 அன்று சமூக வலைத்தளங்கள் வழியாகக் கண்டனப் போராட்டம் நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அப்போராட்டத்தில் பங்கெடுத்தனர். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மதுக்கடைத் திறப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தோம். அவ்வழக்கில் மதுக்கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில் முடிவெடுக்கும் முன் எங்களிடமும் கருத்து கேட்க வேண்டுமெனக் கோரி மகளிர் ஆயம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். இன்னும் அவ்வழக்கு நிலுவையில்தான் உள்ளது என்கிறார் இலெட்சுமி.

மதுக்கடை மூடப்படும் காலங்களிலெல்லாம் மதுக்குடிப்பது பெருமளவு குறைந்து வருவதை பார்க்கிறோம். காவல்துறை கண்காணிப்போடு இருக்கும்போது, இதே காலகட்டத்தில் கள்ளச் சாராயமும் பெருமளவு பெருகிவிடவில்லை. மிகச்சிறு எண்ணிக்கையிலுள்ள குடி நோயாளிகள் தான் மதுக்கடை மூடலால் சிரமப்படுவார்கள். அவர்களையும் உளவியல் ஆலோசனைகள், மருத்துவமனைகள் மூலம் அதிலிருந்து விடுவிப்பதற்குதான் முயல வேண்டுமே தவிர, அந்த சிறு எண்ணிக்கையிலான குடிநோயாளிகளைக் காட்டி மதுக்கடைகளைத் திறப்பதும் ஏற்கக்கூடியதல்ல என்று சொல்லும் இலெட்சுமி,

டாஸ்மாக் திறப்பு…உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேவியட் மனுவை நினைவுபடுத்தும் மகளிர் ஆயம்

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. கொரோனா முடக்கத்தைத் தளர்த்தி மதுக்கடைகளைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுக்கடைகள் திறப்பிற்கு எதிராக மக்களோடு நின்று போராடிய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தானே மதுக்கடைகளைத் திறப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்று தனது கண்டனத்தினை பதிவு செய்கிறார்.

ஏற்கெனவே பெருந்தொற்று முடக்கத்தால் பலரும் வேலையிழந்து தவிக்கும் சூழலில், மிகக் குறைந்த வருவாயே பல குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அக்குறைந்த வருமானம் கூட இழந்து பல குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படும் பேராபத்து உள்ளதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் அவர்,

மது விற்பனை வழியே வரும் வருமானத்தை ஈடுகட்ட மகளிர் ஆயம் தொடர்ந்து மாற்று வழிகளை முன்வைத்து வருகிறது. தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையை மாநில அரசின் ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவு பால் சங்கங்களின் வழியாகவும் தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்று நடத்தினால், ஆண்டுக்கு 40,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். தரமான பால் மக்களுக்குக் கிடைக்கும் விதமாகவும், உழவர்களின் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருப்பதோடு, அரசு எதிர்பார்க்கும் வருமானத்தை விட இரட்டிப்பு லாபம் அடையலாம் என்றும் தனது யோசனையை முன்வைக்கிறார்.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாயை வரியாகவும், இயற்கை வளங்கள் வழியாகவும் எடுத்துச் செல்கின்ற இந்திய அரசிடம் இதனை சுட்டிக்காட்டி அதில் பாதி பங்கையாவது தமிழ்நாடு அரசு கேட்டுப் பெற்றால் கூட, மதுவால் கிடைக்கும் வருமானத்தைவிட கூடுதலாக ஈட்ட முடியும். தீய வழியில் மக்கள் நலவாழ்வைக் கெடுத்து கிடைக்கும் வருமானம் நலவழிப்பட்டதல்ல என்பதையும் அரசு உணர வேண்டும் என்றும் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்துப் போராடிய தி.மு.க., தற்போது தாங்களே அந்த அநீதியைச் செய்வதைக் கைவிட வேண்டும். தமிழ் மக்களும், மகளிரும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று மதுக்கடைகளை மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள மது உற்பத்தி ஆலைகளையும் இழுத்து மூட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆயம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.