ராஜாவுக்கு ராஜா நான் தான்… வலியைச்சொல்லும் ராமதாஸ்

 

ராஜாவுக்கு ராஜா நான் தான்… வலியைச்சொல்லும் ராமதாஸ்

யர்நீதிமன்றத்திற்கு வந்த மிகவும் விசித்திரமான வழக்கு…விடுதலை வாங்கித் தாருங்கள் யுவர் ஆனர்.. என்ற தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு பதிவினை வெளியிட் டிருக்கிறார். இந்த பதிவு ஒரு கற்பனைதான் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அது சொல்லப்பட்டிருப்பது அத்தனையும் உண்மையாகும். ராமதாசின் இந்த பதிவு விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்வியல் குறித்த ஆழமான பார்வையினையும், அவற்றின் வலியையும் சொல்கிறது.

ராஜாவுக்கு ராஜா நான் தான்… வலியைச்சொல்லும் ராமதாஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் சில நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே வழக்கு விசாரணைகள் குறித்து சுவையான உரையாடல்கள் தொடங்குகின்றன.

நீதிபதி 1: நாளை எனது அமர்வில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது.
நீதிபதி 2: அப்படி என்ன விசித்திரமான வழக்கு?
நீதிபதி 1 : வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் நீதி கேட்டு நீதிமன்றம் வருகின்றன.
நீதிபதி 3: அப்படியா…. உண்மையாகவே விசித்திரமான வழக்கு தான். ஆனால், சிங்கங்களின் பிரச்சினையை நாமே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
நீதிபதி 1 : ஆம். உண்மை தான். ஆனால், சிங்கங்களின் தலைவரே ராஜாவுக்கு ராஜா நான் தான் என்று கூறி மனுத் தாக்கல் செய்திருப்பதால் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ராஜாவுக்கு ராஜா நான் தான்… வலியைச்சொல்லும் ராமதாஸ்

நீதியரசர் கூறியவாறு அடுத்த நாள் நீதிபதி 1 அமர்வு முன் சிங்கங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. சிங்கங்களின் சார்பில் அதன் தலைவரே நேர் நின்று வாதாடியது. விசாரணை விவரம்:
நீதிபதி 1 : சிங்கங்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கலாம்.
சிங்கங்களின் தலைவர்: நாங்களும் மனிதர்களைப் போல ஓர் உயிரினம் தான். காட்டுக்கு நாங்கள் தான் ராஜா. உணவுக்காக அன்றி வேறு எதற்காகவும் நாங்கள் யாரையும் துன்புறுத்துவது இல்லை யுவர் ஆனர். மனிதர்கள் காட்டுக்கு வந்து எங்களை வேட்டையாடுவார்கள். ஆனால், நாங்கள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்வதில்லை.

ராஜாவுக்கு ராஜா நான் தான்… வலியைச்சொல்லும் ராமதாஸ்

காட்டில் நாங்கள் சுதந்திரமான வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், எங்களில் சிலரை வனத்துறையினர் பிடித்து வந்து உயிரியல் பூங்காக்களில் அடைத்து மனிதர்களுக்கு காட்சிப் பொருளாக்குகின்றனர்; காசு பார்க்கின்றனர். நாங்கள் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள காடுகளில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வலம் வருவோம். யாரும் எங்களை கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், உயிரியல் பூங்காக்களில் நாங்கள் பத்துக்கு பத்து அறைகளில் அடைக்கப் பட்டிருக்கிறோம். அவர்கள் தரும் உணவும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எங்களுக்கு வழங்கப்படுவதாக கணக்கில் காட்டப்படும் இறைச்சியில் பாதி கூட எங்களுக்கு வழங்கப்படுவதில்லை யுவர் ஆனர்!

கொரோனா எங்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது யுவர் ஆனர். நாங்கள் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நிலா என்ற எங்கள் தோழியை கொரோனா வைரஸ் தாக்குதலால் இழந்துவிட்டோம் யுவர் ஆனர். வன விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்காகத் தான் வனத்துறை இருக்கிறது யுவர் ஆனர். ஆனால், வனத்துறையே எங்களை கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம் யுவர் ஆனர்?

நீதிபதி 1: இந்தப் பிரச்சினைகளையெல்லாம் சரி செய்து விட்டால் போதுமா?
சிங்கங்களின் தலைவர்: போதாது யுவர் ஆனர். உலகில் எந்த உயிரினமும் அடிமை இல்லை யுவர் ஆனர். நரிக்குறவர் என்று ஓர் பிரிவினர் உள்ளனர். அவர்களுக்கு தொழிலே பறவைகளை வேட்டையாடுவது தான். ஆனால், காட்டுக்கோழி, காடை, நாரை போன்றவற்றை சுடுவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த உலகில் அனைத்து உயிரினங்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. நீதிபதிகளாகிய உங்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவ்வளவு ஏன்? காட்டுக்குள் எங்களுக்குக் கூட சுதந்திரம் இருக்கிறது. சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளில் எங்களை வைத்து வித்தை காட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், உயிரியல் பூங்காக்களில் எங்களை வைத்து காட்சிப் பொருளாக்குவதற்கு தடை இல்லை. இதை மட்டும் அனுமதிப்பது என்ன நியாயம்.

ராஜாவுக்கு ராஜா நான் தான்… வலியைச்சொல்லும் ராமதாஸ்

நீதிபதி 1: மனிதர்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தானே அவ்வாறு செய்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்க முடியும்?
சிங்கங்களின் தலைவர்: ஒரு காலத்தில் சிங்கம் எப்படி இருக்கும் என்பது கூட மக்களுக்குத் தெரியாது. ஆனால், இப்போது சாகச நோக்கம் கொண்டவர்கள் காடுகளுக்கே சென்று அங்குள்ள விலங்குகளின் நடமாட்டத்தை படம் பிடித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்கின்றனர் யுவர் ஆனர். National Geographic Channel , Discovery Channel, Animal Planet போன்ற தொலைக்காட்சிகள் அவற்றை 24 மணி நேரமும் ஒளிபரப்புகின்றன. அதன்மூலம் விலங்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கும் போது ஏன் எங்களை உயிரியல் பூங்காக்களில் அடைக்க வேண்டும் யுவர் ஆனர்?

நீதிபதி 1: சரி…. சிங்கங்களாகிய நீங்கள் என்ன தான் எதிர்பார்க்கிறீர்கள்?
சிங்கங்களின் தலைவர்: எங்களுக்குத் தேவை சுதந்திரம் தான். உங்களுக்கு எப்படி ஒரு நாடு, குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்களோ, அதே போல் எங்களுக்கும் நாடு (காடு), குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. எங்கள் குழந்தைகளும் துள்ளி விளையாடுவதை நாங்கள் பார்த்து ரசிப்போம். அதைப் பார்த்து தான் மனிதர்களும் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து சுட்டியாக இருந்தால் சிங்கக் குட்டி என்கிறார்கள் யுவர் ஆனர். எனவே எங்களுக்குத் தேவை விடுதலை தான் யுவர் ஆனர். அதை நீங்கள் தான் தர வேண்டும் யுவர் ஆனர்.

ராஜாவுக்கு ராஜா நான் தான்… வலியைச்சொல்லும் ராமதாஸ்

நீதிபதி 1: உங்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது. அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் உள்ள சிங்கங்கள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் பாதுகாப்பாக காடுகளில் கொண்டு விட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்.

நீதிமன்றம் கலைகிறது. சிங்கத்தின் தலைவரை மற்ற சிங்கங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. அடுத்த சில நாட்களில் உயிரியல் பூங்காக்கள் மூடப்படுகின்றன. அங்கிருந்த விலங்குகள் காடுகளில் கொண்டு விடப்படுகின்றன. அனைத்து விலங்குகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றன.

குறிப்பு: இந்த பதிவு சிங்கங்களின் நலன் கருதிய ஒரு கற்பனை தான். அடிப்படையில் சிங்கங்கள் உள்ளிட்ட எந்த விலங்கும் உயிரியல் பூங்காவில் காட்சிப் பொருளாக வைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பவன் நான். அனைத்து விலங்குகளும் அவற்றின் நிலத்தில் வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான். அதன் தாக்கம் தான் இந்த பதிவு ஆகும்.